யாழ் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் யுரோவில் கேட்போர் கூடத்தில் இன்று கலந்துரையாடல் ஒன்று நடைப்பெற்றது.
1990ம் ஆண்டு வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் மீள குடியேற எடுக்கவேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் அதற்கு தமிழ் மக்கள் ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் உதவுவது தொடர்பிலும் காத்திரமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக பேராதனை பல்கலைகழகத்தின் விரிவுரையாளர் சுமதி சிவமோகன் தெரிவித்தார்.
முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றதில் தமிழ் மக்கள் எவ்வாறு பங்களிப்பு வழங்க முடியும்? என ஆராயப்பட்ட அதேவேளை அதற்கென யாழ்ப்பாணத்தில் இயங்கும் சமூக அமைப்புக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் ஆதரவினை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
விரிவுரையாளர் ஹஸ்புல்லா தலைமையில் நடைப்பெற்ற இக் கூட்டத்தில் பேராசிரியர் சிவச்சந்திரன் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்
1990 ம் அண்டு முஸ்லீம்மக்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் கவலை வெளியிட்ட அனைவரும் முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்ட்டதனை தாம் விரும்பாத போதும் அன்றையச் சூழலில் மௌனம் காப்பதைவிட தமக்கு வேறு வழியிருக்கவில்லையென கவலை வெளியிட்டனர்.
முஸ்லீம் மக்கள் மீள குடியேற்றம் தொடர்பிலான கலந்துரையாடலில் அதிகளவிலான தமிழ்மக்கள் கலந்துக்கொண்ட போதும் முஸ்லீம் மக்களின் பங்களிப்பு இருக்கவில்லையென விரிவுரையாளர் சுமதி சிவமோகன் சுட்டிக்காட்டினர்.
தமிழ் மற்றும் முஸ்லீம் அரசியல் தலைமைகளின் ஆதரவை பெற்று நடைமுறைச்சாத்திமான திட்டமிட்டலுடன் எதிர்காலத்தில் யாழ் முஸ்லீம் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments
Post a Comment