வடக்கு மாகாணம் மட்டுமல்ல, கிழக்கு மாகாணமும் கூட தனக்குப் பரிச்சயமான இடம் தான் என்று தெரிவித்துள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றில் அவர், கொழும்பில் பிறந்து வளர்ந்த ஒருவர், எவ்வாறு வடக்கிலுள்ள மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள முடியும் என்று எழுப்பப்படும் கேள்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
“நான் பிறந்து வளர்ந்தது கொழும்பில் என்றாலும், எனது மூலம் யாழ்ப்பாணம் தான்.
தமிழரின் அரசியல் வரலாற்றில், சேர்.பொன்.இராமநாதன், சேர்.பொன். அருணாசலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற பல முன்னணி அரசியல் தலைவர்கள்,வடக்கில் இருந்து வந்தவர்களாக இருந்தாலும் கொழும்பை அடிப்படையாகவே கொண்டிருந்தனர்.
கொழும்பை மையப்படுத்திய அவர்களின வாழ்க்கை, வடக்கு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அவர்களுக்குத் தடையாக இருக்கவில்லை.
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கொழும்பில் தான் என்றாலும், ஒரு நீதித்துறை அதிகாரியாக வடக்கிலும் கிழக்கிலும் பல இடங்களில் பல ஆண்டுகளாகப் பணியாற்றியுள்ளேன்.
வடக்கு மாகாணம் மட்டுமன்றி, கிழக்கு மாகாணமும் கூட எனக்கு நன்றாகவே பரிச்சயமான பகுதி தான்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment