Latest News

July 30, 2013

கூட்டமைப்பு வேட்பாளர்களை அச்சுறுத்தும் ஸ்ரீலங்கா இராணுவம்
by admin - 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்படுகின்றனர்.
வேட்பாளர்களின் தகவல்களை திரட்டும் முயற்சியில் ஈடுபடுவது போன்று இராணுவத்தினர்
வேட்பாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய அச்சுறுத்தலானது நீதி நியாயமான தேர்தலை கேள்விக்குறியாக்கியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்
தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி சயந்தனின் சாவகச்சேரியில்
உள்ள வீட்டுக்கு நேற்று சென்ற இராணுவத்தினர் அவரது விபரங்களை கேட்டுள்ளனர். மூன்று தடவைகள் வீட்டுக்குச் சென்ற இராணுவத்தினர் இவ்வாறு விபரத்தைப் பெற முயன்றுள்ளனர். தான் ஒரு சட்டத்தரணி என்றும் தனது விபரங்களை பெறுவதற்கு இராணுவத்தினருக்கு அதிகாரம்
இல்லை என்றும் தெரிவித்து அந்த வேட்பாளர் இராணுவத்தினரை திருப்பியனுப்பியுள்ளார். வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டு சில மணி நேரத்துக்குள் வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் தகவல் சேகரிப்பு என்ற பேரில் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இத்தகைய அச்சுறுத்தல்களானது நீதி நியாயமான தேர்தலை கேள்விக்குறியாக்கியுள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை ஜனாதிபதி சந்தித்தபோது நீதி நியாயமான தேர்தல் இடம்பெறும் என்று உறுதியளித்திருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறான வகையில் வேட்பாளர்களின்
வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்தும் நடவடிக்கையில் இராணுவம் இறங்கியுள்ளது. இத்தகைய நடவடிக்கையினை இராணுவம் உடனடியாக கைவிடவேண்டும்.
இவ்வாறு வேட்பாளர்களை அச்சுறுத்தும் அதிகாரம் இராணுவத்துக்கு இல்லை. வட மாகாண சபைத் தேர்தலில் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் இராணுவத்தினர் ஈடுபட முடியாது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.
இராணுவத்தனரின் அச்சுறுத்தல் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கவுள்ளோம்.
பொலிஸ்மா அதிபருக்கும் இது குறித்து தெரிவிப்பதுடன் சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கும்
இவ்விடயத்தை நாம் கொண்டுவரவுள்ளோம்.
« PREV
NEXT »

No comments