Latest News

July 23, 2013

கறுப்பு யூலை 30ஆவது ஆண்டு நிறைவை வலியோடு நினைவுகூரும் கனடியத் தமிழர்கள்
by admin - 0

தமிழ் இன அழிப்பின் மறக்க முடியாத நாளாய் வலியோடும் வடுக்களோடும் கறுப்பு யூலை 83இன் 30ஆம் ஆண்டை நினைவுகூருகின்றனர் கனடியத் தமிழர்.

ஈழத் தமிழரின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட சிறி லங்கா அரசின் தமிழர் மீதான திட்டமிட்ட படுகொலைச் செயல் இதுவாகும்.

திட்டமிடப்பட்ட வகையில் கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் யூலை 24 முதல் 29 வரை தமிழர் மீதான வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. 3000 தமிழர்கள் கொல்லப்படவும் ஆயிரக்கணக்கான வீடுகளும் வர்த்தக நிலையங்களும் அழித்துச் சூறையாடப்படவும் இலட்சக்கணக்கான தமிழர் சொந்த நாட்டிலேயே ஏதிலிகளாகவும் காரணமானது இந்த வன்முறை நிகழ்வு.

கனடியத் தமிழர் வரலாற்றில் மிக முக்கிய பதிவாகக் கறுப்பு யூலை பார்க்கப்படுகிறது. இவ் இன அழிப்பின் போதே ஆயிரக் கணக்கில் ஈழத் தமிழர் கனடாவிற் தஞ்சமடைந்தனர். கனடாவில் வாழக்கூடிய ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் ஏதோ வகையில் இந்நிகழ்வால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இடைவிடாது தொடர்ந்த சிறி லங்கா அரசின் இன அழிப்புச் செயல்களின் உச்சக்கட்டமாக 2009ஆம் ஆண்டு மே மாதம் அமைந்தது. திட்டமிட்ட இன அழிப்பால் இலட்சக்கணக்கான தமிழர் கொல்லப்பட்டும் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தும் நான்கு ஆண்டுகள் ஆன பின்பும் மக்கள் அடக்குமுறைக்கும் இன அழிப்புக்கும் தொடர்ந்தும் ஆளாகிவருகின்றனர். போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படாத நிலையிலும் தமிழர்களுக்கு ஒரு சரியான தீர்வு முன்வைக்கப்படாத நிலையிலும் வலிமிகுந்த வாழ்வு தொடர்கிறது.

கறுப்பு யூலையின் 30ஆவது ஆண்டை வலியோடு நினைவுகூரும் அதே வேளை 30 ஆண்டுகள் கடந்தும் சிறி லங்காவில் நிலைமையில் எந்தவொரு மாற்றமும் தென்படவில்லை. தொடர்தும் தமிழ் மக்கள் சுதந்திரமின்றியும் சுயநிர்ணய உரிமையின்றியும் வடக்கு கிழக்கில் வாழ்ந்து வருகின்றனர். ஆயுதப் போராட்டம் அமைதியான பின்னரும் இராணுவக் கட்டுப்பாட்டில் பயத்தோடும் பாதுகாப்பற்ற நிலையிலுமே தமிழர் வாழ்கின்றனர்.

கறுப்பு யூலையின் நேரடியான அல்லது மறைமுகமான தங்கள் அனுபங்களை ஆவணப்படுத்தும் பணியைக் கனடியத் தமிழர் பேரவை பல ஆண்டுகளாய் ஆற்றிவருகிறது. தங்கள் அனுவத்தையும் பகிர்ந்து கொள்ளுமாடு கனடியத் தமிழர் பேரவை புலம்பெயர் தமிழருக்கு வேண்டுகோள் விடுக்கிறது. http://www.blackjuly83.com/SubmitStory.htm என்ற இணையத்தளத்திற்குச் செல்வதன் மூலமோ அல்லது குமுக வலைத்தளங்கள் ஊடாகவோ தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும்.

கறுப்பு யூலை 30 ஆண்டு நிறைவையொட்டிச் சிறி லங்கா அரசின் திட்டமிட்ட தமிழின அழிப்பை எடுத்துக்காட்டும் வகையில் கனடியத் தமிழர் பேரவை கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதில் கறுப்பு யூலைத் தாக்குதல்களில் இருந்து உயிர் தப்பியோரின் சாட்சியங்களும் அனுபவங்களும் அடங்கியிருக்கும். கனடியத் தமிழர் அனைவரையும் இக் கண்காட்சியிற் கலந்து கொள்ளுமாறு கனடியத் தமிழர் பேரவை அழைப்பு விடுக்கிறது.

நாள்: வியாழக்கிழமை யூலை 25 2013

நேரம்: மாலை 6:00 மணி

இடம்: இசுகாபரோ சிவிக் நடுவம்

கூடிய விளக்கங்களுக்கும் நேர்காணல்களுக்கும் கனடியத் தமிழர் பேரவை 416.240.0078
« PREV
NEXT »

No comments