வெள்ளத்துக்கு 150 பேர் பலி என்றும், 5 ஆயிரம் பேர் கதி என்ன என்றும் அலமரும் தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
பாதிப்புக்கு ஆளானவர்கள் மட்டுமல்லர்; அவர்களின் வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் சென்றவர்களின் நிலை என்ன என்ற வினாக்குறியை எழுப்பி வேதனையின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
மானசரோவர் யாத்திரை தடை செய்யப் பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுள்ள வர்களுக்குப் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
இவ்வளவு நடந்தாலும் ஓர் உண்மையைப்பற்றிப் பெரும்பாலோர் சிந்திப்பதில்லை. பக்தர்கள் யாத்திரைக்காகச் சென்ற இடம்பற்றி அவர்களின் நம்பிக்கை என்னவாக இருந்தது?
சக்தி வாய்ந்த கடவுள் – அந்தக் கடவுள்கள் குடிகொண்டு இருக்கும் அந்தக் கோவில்களுக்குச் சென்றால் நல்ல வரம் கிடைக்கும்; தங்களின் வாழ்க்கைச் சுமைகள் தீரும் – வளமான எதிர்காலம் அமையும், தாங்களும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் நோய் நொடியின்றிச் சுகமாக நீண்ட காலம் வாழ்வார்கள் என்று எதிர்பார்த்துத் தானே இந்தக் கோவில்களுக்குச் செல்லுகிறார்கள்.
இப்பொழுது மட்டுமல்ல, இதற்கு முன்பேகூட கும்பமேளா, கும்பகோணம் மகாமகம், அய்யப்பன் கோவில் மகரஜோதி தரிசனம் என்று சொல்லி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலியானது வாடிக்கையான ஒன்றுதானே!
கடவுள்கள் தங்களைக் கைவிட்டுவிட்டாரே என்று ஏன் அவர்கள் சிந்திப்பதில்லை? கடவுளுக்கு சக்தி என்று ஒன்று இருந்தால், அவரை நம்பி வந்த மக்களைக் காப்பாற்றியிருக்க வேண்டாமா? என்பதுபற்றியெல்லாம் நியாயமாகச் சிந்திக்க வேண்டாமா?
கடவுள் நம்பிக்கை என்னும் போதை அளவுக்குமீறி குடிகொண்டு இருப்பதால்தான் – அதைப்பற்றிச் சிந்திக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்கும் போது பரிதாபப்படத்தான் வேண்டியுள்ளது.
பக்தி என்பது மூளையில் மாட்டப்பட்ட விலங்கு என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சொன்ன கருத்து மிகவும் சிந்திக்கப்படவேண்டிய, சிந்தித்துச் செயல்பட வேண்டிய ஒன்றாகும்.
பக்தி சிறப்பிதழ்களை வெளியிடும் பத்திரிகை முதலாளிகள், எழுத்தாளர்களாவது இதைப்பற்றி எழுதவேண்டாமா? மாறாக என்ன எழுதுகிறார்கள்? நேற்றைய நாளேடு ஒன்றின் தலைப்பு என்ன தெரியுமா?
மழை, வெள்ளம், நிலச்சரிவுக்கு இடையே கேதார்நாத் கோவில் மட்டும் சேதமின்றித் தப்பிய அதிசயம்! என்று தலைப்பிட்டுச் செய்தியை வெளியிடுகிறது.
இதன் நோக்கம் என்ன? கடவுளை நம்பி வந்தவர்கள் பலியாகிவிட்டார்களே, பல துன்பங் களுக்கு ஆளாகிவிட்டார்களே – கடவுள் சக்தி என்ன என்ற சிந்தனை இயல்பாக வந்துவிடும் அல்லவா? – அந்த நிலையைப் பக்தர்கள் அடைந்து விடக்கூடாது என்பதற்கான திசை திருப்பும் யுக்திதான் இத்தகைய செய்திகள்.
இதில் இன்னொரு கேள்வியும் எழுகிறது. கடவுள் தன்னை மட்டும்தான் காப்பாற்றிக் கொள்வாரா? தன்னை நாடிவந்த பக்தர்களைக் காப்பாற்றும் சக்தி அல்லது நல்ல மனம் கடவுளுக்கு இல்லையா? என்ற கேள்வி எழுகின்றதே.
அய்யப்பன் கோவிலும், சிறீரங்கம் கோவிலும் தீப்பற்றி எரிந்ததுண்டே! காளகஸ்தி கோவிலின் நெடுங்கோபுரம் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்தது உண்டே! அவற்றிற்கு என்ன பதிலாம்?
பக்தர்களே, கடவுள் என்று நம்பி கோவிலில் அடித்து வைக்கும் பொம்மைக்கு, சிலைகளுக்குச் சக்தி ஏதும் இல்லை – இல்லவே இல்லை – நம்பி ஏமாறாதீர்கள்!
No comments
Post a Comment