Latest News

May 04, 2013

மனித உரிமை தொடர்பில் லண்டனில் முக்கிய பேச்சு
by admin - 0

சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பொதுநலவாய மாநாட்டை நடத்தும் வாய்ப்பு கொழும்புக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் சம்பந்தமாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்து முக்கிய பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார். லண்டனில் நேற்றுமுன்தி னம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பிரதீபா சிறிவர்ண மஹாநாமஹேவா, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ், வவுனியா இணைப்பாளர் எம்.ரோஹித பிரியதர்ஷன, மட்டக்களப்பு இணைப்பாளர் அப்துல் கரீம் அப்துல் அஸீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலவரங்கள், மீள்குடியேற்றம், மும்மொழிக் கொள்கை, வடக்கு, கிழக்கு நிலைவரங்கள் உட்பட பல விடயங்கள் தொடர்பாக பொது நலவாய செயலாளர் கமலேஷ் ஷர்மா இலங்கைக் குழுவினரிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார். அத்துடன், இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்க மேலும் செயற்பாடுகள் அவசியம் என்றும், இனங்களுக் கிடையிலான ஐக்கியம் கட்டியெழுப்பட வேண்டும் என்றும் இதன்போது கருத்து வெளியிட்டுள்ள கமலேஷ் சர்மா, இதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் கமலேஷ் ஷர்மா இலங்கைக்கு மேற்கொண்டிருந்த பயணம் சம்பந்தமாகவும், பொதுநலவாய நாடுகள் அமைப்பு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கவுள்ள உதவித்திட்டங்கள் சம்பந்தமாகவும் இச்சந்திப்பில் கருத்துப் பறிமாற்றல்கள் இடம்பெற்றுள்ளன. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக்குழு கூட்டம் கடந்த 26 ஆம் திகதி லண்டனில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் இலங்கை விவகாரம் குறித்து பேசப்படாவிட்டாலும், குறித்த மாநாடு முடிவடைந்தப் பின்னர், ஊடகவியலாளர்களைச் சந்தித்த கமலேஷ் சர்மா, பொது நலவாய மாநாடு திட்டமிட்ட அடிப்படையில் இலங்கையில் நடைபெறும் என்ற அறிவிப்பை விடுத்தார். இலங்கை அரசு, பொதுநலவாய அமைப்பின் கொள்கைப் பிரகடனங்களை மீறிச்செயற் படுவதால் அங்கு மாநாட்டை நடத்தக்கூடாது என சர்வ தேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்துவந்த நிலையிலேயே கமலேஷ் சர்மா இந்த அறிவிப்பைவிடுத்தார். பொதுநலவாயத்தின் இந்த முடிவானது, கனேடிய அரசுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இலங்கை மனித உரிமை நிலைவரங்களை கோடிகாட்டி அங்கு மாநாட்டை நடத்தக்கூடாது என கனேடிய அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments