தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரின் யாழ்.அலுவலகத்தில் இன்று நண்பகல் 12.30 மணியிலிருந்து பிற்பகல் 3.00 மணிவரை இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. இவ் விசாரணை தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர்
செல்வராஜா கஜேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் யாழ்ப்பாணம், நாவலர் வீதியிலுள்ள அவர்களுடைய
அலுவலகத்திற்கு இன்று நண்பகல் 12.00 மணிக்கு என்னை வருமாறு அழைத்திருந்தனர். அதற்கமைய
நானும் குறித்த நேரத்திற்கு அவ் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். என்னிடம் பயங்கரவாத
குற்றத்தடுப்புப் பிரிவினர் கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பாக சுமார்
மூன்று மணித்தியாலங்கள் விசாரணைகளை மேற்கொண்டனர். மேலும் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் என்னிடம் விசாரித்தனர் என்றார். கடந்த 18ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மன்னாரில் நடைபெறவிருந்த
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்வதற்காகச்
சென்றபொழுது குறித்த கஜேந்திரன் உள்ளிட்டவர்களை பொலிஸார்
கைது செய்து குற்றத்தடுப்பு பயங்கரவாதப் பிரிவினரிடம் ஒப்படைத்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே இன்றும் விசாரணைகள் இடம்பெற்றதாகவும் இவ் விசாரணைகளின்
பொழுது கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கட்சியின் நிதி நிலைமைகள் தொடர்பாகவும் குற்றத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும்
தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment