தமிழர்களை அழிப்பதில் இனவாதக்கட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் மும்முரமாக உள்ளதாக மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
13 ஆவது அரசமைப்பு திருத்தத்தின் பற்களை அரசு ஏற்கனவே கழற்றிவிட்டது. மிஞ்சியிருப்பது காணி, பொலிஸ் அதிகாரங்கள்தான். அவற்றையும் இல்லாதொழிக்குமாறு சிங்களப் பேரினவாதிகள் சிலர் கூச்சலிடுகின்றனர். அரசு அவ்வாறு செய்யுமானால் தமிழ் மக்கள் இறுதியாக வைத்துள்ள நம்பிக்கையையும் அது இழக்கும்.
தமிழர்களை அடக்கி ஒடுக்கி தமிழ் மொழியைப் புறக்கணிப்பதில் ஹெல உறுமய, பொதுபலசேனா, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உட்பட சிங்கள இனவாதக் கட்சிகளும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அமைச்சர் விமல் வீரவன்ஸ உட்பட சிங்கள இனவாத அரசியல்வாதிகள் சிலரும் மும்முரமாகவுள்ளனர்.
இவர்களுடன் சேர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தமிழர்கள் தனிநாடு கேட்கிறார்கள், தமிழீழம் கேட்கிறார்கள் என்று கூறி எமது இனத்தை அழிக்க முற்படுகின்றார்.
ஆனால், தமிழ் மக்கள் தனி நாட்டையோ அல்லது தமிழீழத்தையோ கேட்கவில்லை. வடக்கு, கிழக்கில் சகல உரிமைகளுடன் தம்மைத்தாமே ஆளவே அவர்கள் விரும்புகின்றனர்.
எனவே, சந்தேகத்திற்கு இடமளிக்காமல் வடக்கு மாகாணசபைத் தேர்தலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடன் நடத்தவேண்டும் என மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்
No comments
Post a Comment