
மாணவர்கள் போப்பிற்கு அனுப்பிய கடிதம் வருமாறு :
வணக்கத்திற்குரிய திருத்தந்தை பிரான்சீஸ் அவர்களுக்கு!
உலகெங்கிலும் வாழும் 150 மில்லியன் (15 கோடி) தமிழ் மக்களின் சார்பாக வணக்கத்தையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். ஏழைகள், நோயாளிகள், பாதிக்கப்பட்டோரின் பங்காளியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும், மறுக்கப்படும் மனித நேய உரிமைகளுக்கு உயிர்கொடுப்பவராகவும், மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தும், உலகின் மனசாட்சியாக உலகத் தலைவர்களில் உயர்ந்து விளங்கும் 120 கோடி உலக கத்தோலிக்க மக்களின் தலைவர் திருத்தந்தை (ஞடியீந) என்பதை அறிவோம்.
மார்ச் 13, 2013 அன்று திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்ட நீங்கள், புனித பிரான்சீஸ் அசிசியாரின் பெயரைத் தேர்வு செய்ததையும், இதுவரை எளிமைக்கும், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்களின் பங்காளராக விளங்குவதிலும் பேர் போனவர் என்பதை கண்டு உலக மக்களுடன் தமிழக இளைஞர்களும் மகிழ்கின்றோம். ஈஸ்டர் பண்டிகையின்போது (இயேசுவின் உயிர்ப்பு நாள்) திருத்தந்தை தாங்கள் வழங்கிய செய்தியில்:
“கிறிஸ்துவே நம் அமைதி, அவர் வழியாகவே இவ்வுலகம் முழுவதற்கும் அமைதி வழங்க முடியும். மத்திய கிழக்குப் பகுதிக்காக, குறிப்பாக இணக்கத்தின் பாதையைக் கண்டுகொள்ள முயலும் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே அமைதி நிலவ, பல காலமாக தொடர்ந்து வரும் சண்டைகள் நிறுத்தப்படுவதற்கு உதவும் பேச்சுவார்த்தைகள் ஆர்வமுடனும், மன உறுதியுடனும் மீண்டும் துவக்கப்பட; ஈராக்கின் அமைதிக்காக அங்கு அனைத்து வன்முறைகளும் நிறுத்தப்பட; எல்லாவற்றிற்கும் மேலாக சிரியாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாதுகாப்பும், உதவியும் ஆறுதலும் எதிர்நோக்கி நிற்கும் எண்ணற்ற அகதிகளுக்காகவும்; ..... வன்முறை மோதல்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆப்பிரிக்காவுக்கும் அமைதி தேவை. மாலி நாட்டில் இணக்கமும், நிலையான தன்மையும் கொணரப்படவும், வன்முறைக் கும்பல்களால் குழந்தைகள் கூட பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டு, அப்பாவி மக்களின் வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நைஜீரியாவில் அமைதி திரும்பவும், மத்திய ஆப்பிரிக்க குடியரசின் அமைதி திரும்பவும்” என்று குரல் கொடுத்துள்ளீர்கள்.
மேலும், “ஆசியாவில் குறிப்பாக கௌரிய தீபகற்பத்தில் அமைதி திரும்பட்டும்.... ஒப்புரவின் புதுப்பிக்கப்பட்ட உணர்வு வளரட்டும்” என்று கூறியுள்ளீர்கள். உலக நாடுகளில் நடைபெறும் மதக்கலவரங்கள், மனித உரிமை மீறல்கள், வன்முறைகள், கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்த நீங்கள், ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழர்கள் இலங்கையில் உரிமைகள் மறுக்கப்பட்டு, இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு வந்ததையும், 1983 ஆம் ஆண்டிற்குப் பின் ஈழத் தமிழர்களை இலங்கை அரசு திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போரில், அப்பாவி ஈழத் தமிழர்கள் ஒன்றரை இலட்சம் பேர் திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளனர். போர் முடிவுக்கு வந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்பும் இலங்கை இராணுவம் தமிழர் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, எஞ்சியுள்ள ஈழத்தமிழர்களை அழிக்கும் தமிழ் இனப்படுகொலையை இலங்கை அரசு செய்து வருகிறது. இது குறித்து ஐ.நா. சபையும் உலக நாடுகளும் கண்டணம் தெரிவித்து இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில் தாங்கள் எதுவுமே கூறாதது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
இலங்கையில் எஞ்சியுள்ள மக்களை மீள்குடியமர்த்தும் பணியானது சரிவர நடக்கவும், தமிழர் பகுதிகளிலிருந்து இலங்கை இராணுவம் உடனடியாக விலக்கப்படவும், தமிழ் மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படவும், 2009 இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டது ஒரு இனப்படுகொலை, வரலாறு காணாத மனித உரிமை மீறல், ஒரு போர் குற்றம் என்று கூறி இலங்கை அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இலங்கையில் சிங்களர்களுக்கு இணையாக ஈழத் தமிழர்களுக்கு அரசியல் சாசன ரீதியில் சம உரிமை வழங்கப்படவும், உரிய நீதி கிடைத்து, நிரந்தர அரசியல் தீர்வு கண்டு அமைதியான ஈழம் காணவும் குரல் கொடுப்பீர்கள் என்று 150 மில்லியன் உலகத் தமிழர்கள் சார்பாக இந்தியாவின் தமிழ் நாட்டு கல்லூரி மாணவர்கள் அமைப்புகள் பணிவுடன் கேட்டுக்கொள்கிறது.
என்றும் உங்களது ஆசீரால், ஆன்மீக மற்றும் சமூகப் பணிகளால் இவ்வுலகம் புதுப்பிக்கப்பட வாழ்த்துகின்றோம்.
தங்களின் ஆசீர் வேண்டும்.
தமிழ்நாடு கல்லூரி மாணவர்கள் அமைப்பு
No comments
Post a Comment