Latest News

April 05, 2013

ஊடக சுதந்திரம் கேள்விக்குறி உதயன் தாக்குதலால் உறுதி; நீதியமைச்சர் ஹக்கீம் கண்டனம்
by admin - 0

இலங்கையில் ஊடக சுதந்திரம் தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது எனவும், "உதயன்' கிளிநொச்சி அலுவலகம் மீதும், ஊழியர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் அதன் புதிய அத்தியாயம் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்தோனேஷியாவுக்கு மேற்கொண்டிருந்த உத்தியோகபூர்வ விஜயத்தை அவசரமாக முடித்துக்கொண்டு நேற்று வியாழக்கிழமை அதிகாலையில் நாடு திரும்பியவுடனேயே "உதயன்' மீதான தாக்குதல் பற்றிக் கேள்வியுற்று பெரிதும் கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் ஹக்கீம், அது குறித்து விடுத்துள்ள கண்டனச் செய்தியில் மேலும் கூறியுள்ளவை வருமாறு:
"சுடர் ஒளி' பத்திரிகையின் சகோதரப் பத்திரிகையான "உதயன்' வடக்கில் மட்டுமன்றி, தற்பொழுது தலைநகர் கொழும்பிலும் கூட விற்பனையாகி அதற்கெனத் தனியான வாசகர் வட்டமொன்றையே உருவாக்கியுள்ளது. நானும் அதனை வாசிக்கின்றேன். செய்தி ஊடகங்கள் இலக்குவைத்து தாக்கப்பட்டு வருவது ஆரோக்கியமான செயலாகத் தென்படவில்லை என்பதோடு, அது வாசகர்களுக்கும் உரிய தகவல் அறியும் உரிமையை மறுப்பதும், மலினப்படுத்துவதுமாகும். ஊடகங்களுக்கு எதிரான இவ்வாறான அடாவடித்தனங்கள் மேற்கொள்ளப்படும் போது அதில் சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு, பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டுமென நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன். இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள கண்டனச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments