
மேலும், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சர்வதேச குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து திரும்பப் பெறவேண்டும் என்றும் மாணவர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தள்ளது. சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்நாடு மாணவ கூட்டமைப்பினர் இத்தகவல்களை தெரிவித்தனர்.
31ம் தேதி கெடு: இலங்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் பிரதிநிதிகள் வரும் 31-ம் தேதிக்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், தவறினால் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என்றும் மாணவர் கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
பயனற்ற தீர்மானம் : மாணவர்கள் குற்றச்சாட்டு ஐ.நா., மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பயனற்றது, இலங்கை இறுதிக் கட்டப் போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், இலங்கைத் தமிழர்களுக்கான தனி நாடு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது.
அகதிகள் உண்ணாவிரதம்: இலங்கை அரசைக் கண்டித்து பல்வேறு அகதி முகாம்களை சேர்ந்தவர்கள் சென்னையில் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். புழல், காவாங்கரை பகுதியில் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு 23 ஆண்டுகளுக்கு முன்னர் புலம் பெயர்ந்து வந்த அகதிகள் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் சென்னை வள்ளுவர் கோட்டத்திலும் 500க்கும் மேற்பட்ட அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
11வது நாளாக உண்ணாவிரதம்: இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடைபெற்ற இனப்படுகொலையைக் கண்டித்து திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் 7 பேர் தொடர்ந்து 11-வது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுவாக்கெடுப்பு நடைபெறவேண்டும், தனி ஈழம் அமைய வேண்டும், ராஜபக்ச போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும். இந்த இலக்கை எட்டும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என உண்ணாவிரதப் பந்தலில் இருந்த மாணவர்கள் தெரிவித்தனர்.
இளைஞர் தீக்குளிப்பு: தமிழ் ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னை நெற்குன்றத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார்.
தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் நேற்றிரவு நெற்குன்றத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட விக்ரம் என்ற இளைஞர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியபிடி, திடீரென தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
இதையடுத்து கருத்தரங்கில் பங்கேற்ற அவரது நண்பர்கள் விக்ரமை உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது.
"தீக்குளிப்பு வேண்டாம்": வைகோ - தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த விக்ரம் தீக்குளித்து உயிரிழந்ததற்கு மதிமுக பொதுச் செயலாளார் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் யாரும் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.உயிரோடு இருந்து போராட வேண்டியவர்கள் இப்படி தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்றும் வைகோ கூறியுள்ளார்.
No comments
Post a Comment