Latest News

March 18, 2013

மதுரையில் மாணவர்கள்- பொலிஸார் மோதலால் பதற்றம்
by admin - 0

இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பொலிஸார் மோதியதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இது குறித்து தெரியவருவதாவது:

மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் 6 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்கள். கடந்த 13ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்தில், இஸ்ரவேல், முத்துசங்கு, ஹபீப் ரஹ்மான், கணேஷ்பிரபு, மலைச்சாமி, அசோக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

3வது நாளில் மலைச்சாமி, ஹபீப்ரஹ்மான், இஸ்ரவேல் ஆகியோரின் உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டதால், அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு டாக்டர்கள் வற்புறுத்தியும் கேட்காத நிலையில், அடுத்தடுத்த போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றால் நல்ல உடல்நலம் தேவை என்று மற்ற மாணவர்கள் சொன்ன பிறகு போராட்டத்தைக் கைவிட்டனர்.

இருந்த போதிலும் மற்ற 3 மாணவர்களும் 6வது நாள் வரை போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் அவர்களது உடல்நலமும் பாதிக்கப்பட்டது. அவர்களைச் சந்தித்த மதுரை வக்கீல் சங்க செயலாளர் ராமசாமி மற்றும் நிர்வாகிகள், "உங்கள் போராட்டத்தை மனப்பூர்வமாக நாங்கள் வரவேற்கிறோம்.

ஆனால், இதற்கு மேல் நீங்கள் உண்ணாவிரதம் இருப்பது நல்லதல்ல. இப்போது போராட்டத்தைக் கைவிடுங்கள். இலங்கை பிரச்னையில் பின்னடைவு ஏற்பட்டால், நாங்களும் சேர்ந்து உங்களோடு போராடத் தயாராக இருக்கிறோம்" என்று சமரசப்படுத்தினர். இதைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதேபோல பிற கல்லூரி மாணவர்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஞாயிறன்று தமிழ் மாணவர் பேரவை சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை ரேஸ்கோர்ஸில் இருந்து தொடங்கிய இந்த பேரணி, தல்லாகுளம், தமுக்கம், காந்தி மியூசியம் வழியாக கலெக்டர் அலுலவகத்தை அடைந்ததும் அங்கே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சுமார் 500 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

அப்போது சென்னையில் இருந்தபடி போராட்டத்தை வாழ்த்தி பழ.நெடுமாறன் செல்போனில் பேசினார். அவரது பேச்சு ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டது. "இலங்கையில் இனப்படுகொலை நடக்கிறது என்று நாமெல்லாம் சொன்னபோது, அதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு தவறிவிட்டது. இப்போதும் இந்திய அரசு மவுனம் சாதிப்பது வேதனையளிக்கிறது. மாணவர்களாகிய உங்கள் போராட்டம் உலகத் தமிழர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. ஈழத்தமிழர் இன்னல்கள் தீர உங்கள் போராட்டம் வெற்றியடைய வேண்டும்" என்று பழ.நெடுமாறன் பேசினார்.

இதற்கிடையே நேற்றிரவு அனைத்து கல்லூரி மாணவர்களும் கூடி, தமிழ் ஈழ மாணவர் விடுதலை இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள். இந்த அமைப்பின் சார்பில் இன்று காலையில் மதுரைக் கலலூரியில் இருந்து ரயில் நிலையத்தை நோக்கி பேரணி நடந்தது.

திடீரென அந்த மாணவர்கள் கட்டபொம்பன் சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து ஸ்தம்பித்ததால், போலீஸார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது மதுரைக் கல்லூரி மாணவர்கள் சிலர், சாலையில் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒரு மாணவர் காயமடைந்தார். உடனே அவர் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மற்ற மாணவர்களை பாண்டி பஜார் பகுதிக்கு அழைத்துச் சென்று பொலிஸார் சமரசப்படுத்தினர்.

இதற்கிடையே தியாகராஜர் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவர்களும் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 6 பேர் ரயில் மறியல் செய்ய முயன்றபோது, போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் ரயில் நிலையம் முன்பு சட்டையைக் கழற்றிவிட்டு அரைநிர்வாணப் போராட்டம் நடத்தினார்கள்.

வரும் 21ஆம் தேதியன்று தமிழ் ஈழ விடுதலை மாணவர் இயக்கம் சார்பில் சுமார் 1000 மாணவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பேரணி நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளர் ஆதி தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments