Latest News

March 19, 2013

எந்த கட்சியினரையும் சேர்க்காதீர்கள்; தனித்து நில்லுங்கள்-போராடும் மாணவர்களுக்கு வைகோ அட்வைஸ்
by admin - 0

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அறவழியில் போராடும் மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் மனிதாபிமானம் அற்ற செயல் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மதுரையில் நேற்று சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். இதில் மாணவர்கள் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை மதுரை கோரிப்பாளையம் பெட்ரோல் பங்க் முன்பு ஜீன்ஸ்பேண்ட் அணிந்து வந்த வாலிபர் திடீரென உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அப்போது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கோஷம் போட்டபடி கீழே சாய்ந்து விட்டார். சிறிது நேரத்தில் தீயில் கருகி அந்த வாலிபர் உயிரிழந்தார். அவரது உடல் ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நள்ளிரவில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து உயிரிழந்த வாலிபருக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் போலீஸ் தாக்கியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் மதுரை சட்டக்கல்லூரி மாணவர் அய்யாத்துரையை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசியதாவது:

மனிதாபிமானம் அற்ற செயல்

மதுரையில் அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. துணை கமிஷனர் முன்னிலையில் போலீசார் இந்த மனிதாபிமானற்ற தாக்குதல் நடத்தியுள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அனைத்து போலீசார் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிப்பாளையத்தில் தீ வைத்து கொண்ட வலிபர் தமிழ் ஈழத்துக்காக தன் உயிரை மாய்த்து கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு மனிதாபமான முறையில் அஞ்சலி செலுத்தியுள்ளேன் இவ்வாறு வைகோ கூறினார்.

கட்சி சார்பற்று போராடுங்கள்

இதனிடையே நேற்று ஈரோடு சென்ற வைகோவை மாணவர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது, அவர்களிடையே பேசிய வைகோ,

மாணவர்களாகிய நீங்கள் சரியான இலக்கை நிர்ணயித்து அமைதியுடன் போராடி வருகிறீர்கள். நீங்கள் எதைக்கண்டும் அஞ்சக்கூடாது. உங்கள் மத்தியில் அரசியல் பூச வேண்டாம். எந்த கட்சியினரையும் நீங்கள் சேர்க்க கூடாது. தனித்து நில்லுங்கள். தனித்தே போராடுங்கள் போராடி கொண்டே இருங்கள் உங்கள் இலக்கை அடையும் வரை போராடுங்கள் சுதந்திர தமிழ் ஈழமே நமது லட்சியம் என்று கூறினார்.

வஞ்சிக்கும் மத்திய அரசு

இதனிடையே மத்திய அரசு பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்' என்ற பழமொழிக்கு ஏற்ப இந்திய அரசு ஜெனீவாவில் ஈழத் தமிழருக்கு துரோகம் இழைத்துக் கொண்டே, இங்கு இந்தியாவில் காங்கிரஸ் தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஈழத்தமிழருக்கு உதவுவோம் என்று கூறி மோசடி நாடகம் நடத்துகிறது என்று அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியுள்ளார்.

தரணி வாழ் தமிழர்களையும், தமிழ் ஈழ உணர்வாளர்களையும், ஆவேசமாகப் புரட்சி பூபாளம் ஒலிக்கும் தமிழக மாணவர்களையும் இந்த மோசடி வேலைகளால் ஏமாற்ற முடியாது. தமிழ்க் குலம் மாணவர் சமுதாயத்துக்கு என்றென்றைக்கும் நன்றிக்கடன்பட்டு உள்ளது. எனவே, தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டு அமைப்பின் சார்பில், 20 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் தொடர் முழக்கப் போராட்டத்தில் அனைத்து மாணவர்களும் பங்கு ஏற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments