Latest News

February 03, 2013

கருணாநிதி உட்பட மௌனம் காத்த விஸ்வரூபம்
by admin - 0

இலங்கையில் இனப்படுகொலைகள் நடந்து கொண்டிருந்த பொழுது காலையில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து மாலையில் அதனை முடித்துக் கொண்டு, இது சகோதரச் சண்டை என 30 ஆண்டு யுத்தத்துக்கு விளக்கம் கொடுத்தபடி மத்திய அரசுக்கு எந்த வித பெரிய அழுத்தமும் கொடுக்காது இருந்த கலைஞர் கருணாநிதி உட்பட மௌனம் காத்த பல அரசியல்வாதிகள் கமலஹாசன் என்ற கலைஞனுக்கு ஆதரவாக இன்று அறிக்கைகளை வழங்கிய வண்ணம் இருக்கின்றார்கள்.
சுமார் ஒரு மாதத்துக்கு மேல் தனித்து நின்று போராடிய கமலஹாசன் தான் மதவாதம் இல்லாத ஒரு மாநிலத்துக்கு அல்லது நாட்டுக்கு செல்வேன் என்று இன்று அறிக்கை விட்டதும் சகோதரக் கலைஞர்கள் எல்லாம் தங்களின் எதிர்ப்பை தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கு காட்டாமல் தங்களின் அனுதாபத்தை கமலஹாசனுக்கு காட்டியபடி இருக்கின்றார்கள்.
முஸ்லீம் இனச்சகோதரர்களின் மனதை நோகடிக்கும் காட்சிகள் என இந்தப் படத்தில் வந்த பொரும்பான்மையான காட்சிகள் முன்பு பல இணையத்தளங்களில் வந்தவையே. பயங்கரவாதிகள் அல்லது தீவிரவாதிகள் என்ற பெயரால் அழைக்கப்பட்டாலும் மனிதநேயத்தை காலில் போட்டு மிதிக்கும், அண்மைக் காலங்களில் இடம் பெற்ற பல காட்சிகள் இந்தப் படத்தில் வந்துள்ளன.
மக்கள் மன்றத்தின் முன்னால் நிறைவேற்றப்பட்ட றிசானாவின் மரணதண்டணைக்கும் சிலகாலங்களுக்கு முன்னால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டபடி பத்திரிகையாளர்களுக்கு தீவிரவாதிகள் அளித்த மரணதண்டனைகளுக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. முதலாவது அரசாங்கம். இரண்டாவது தீவிரவாதம். இரண்டிலும் காவு கொள்ளப்பட்டது உயிர்களே. இது போன்ற காட்சிகளும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த வன்முறைக் கொலைகளை அரசதரப்பில் இருந்தும் போராளிகளின் தரப்பில் இருந்தும் நாங்கள் எங்கள் நாட்டில் வேறுபட்ட காலகட்டங்களில் வேறுபட்ட வடிவங்களில் சந்தித்துதான் இருக்கின்றோம்.
கருத்துச் சுதந்திரம் பற்றியும் அது மற்றவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது என்பது பற்றியும் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த பிரச்சனை டென்மார்க்கில் ஒரு பத்திரிகையில் வெளியான கேலிச்சித்திரம். யூலண்ட் போஸ்ட் என்னும் அந்தப் பத்திரிகை இறுதிவரை இஸ்லாமிய அமைப்புக்களிடம் மன்னிப்புக் கேட்காதபடியால் அரபுநாடுகளுக்கான டென்மார்க்கின் பால், பட்டர், சீஸ், இறைச்சி போன்றவற்றின் ஏற்றுமதி முற்றாகப் பாதிக்கப்பட்டது.
இதில் ஏற்பட்ட நட்டம் 100 கோடிகள் இல்லை. இலட்சம் கோடிகள். ஆனால் இறுதிவரை அந்தப் பத்திரிகையோ அல்லது டென்மார்க் அரசாங்கமோ மன்னிப்புக் கேட்கவில்லை. இன்றும் அந்த சித்திரத்தை தீட்டியவரின் உயிருக்கு பிரத்தியோக பாதுகாப்பு வழங்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. கருத்து சுதந்திரம் என்பது வேறு ஐயா! எங்கள் அரசகடமை என்பது வேறு ஐயா என்ற வகையில் டென்மர்;க் போய்க் கொண்டிருக்கின்றது. இங்கு கருத்து சுதந்திரத்திற்கு இடம் கொடுத்தால்தான் நாடு நன்றாக இருக்கும் என்பது கோட்பாடு. அங்கு அதை அமுக்கினால்தான் அரசு தப்பிக்கும் என்று நிலைப்பாடு.
இன்று இந்தப் பிரச்சனையில் தலையிட்டிருக்கும் தமிழக முதலமைச்சர் ”பாதுகாப்பு வழங்க எங்களிடம் பொலிஸ்படை போதாது… கமலும் முஸ்லீம் அமைப்புகளும் கலந்தாலோசித்து சில காட்சிகளை நீக்கலாம்” என சமரச முயற்சி எடுத்திருக்கிறாரே தவிர ஆணிவேர் பிரச்சனைக்கு தீர்வு காணவேயில்லை.
இனிவரும் காலங்களில் பின்வரும் காட்சிகள் திரைப்படங்களில் வந்தால் 144 தடைச்சட்டத்தின்படி படங்கள் ஓடாது நிறுத்தப்படலாம். 1. இந்திய வீதிகளில் பிச்சைக்காரர்கள்; 2. மக்களைத் துன்புறுத்தம் பொலிஸ்காரர்கள் 3. பொய் பேசும் அரசியல்வாதிகள்… இந்த வரிசையில் 100 காட்சிகளை வரிசைப்படுத்திலாம். அதற்கான 1000 காரணங்களைச் சொல்லலாம். எனவே இனிவரும் காலங்களில் பத்திப்படங்களுக்கு ரொம்ப மௌசு கிடைக்கலாம். என்ன வித்தியாசம்?… உதட்டோர முத்தக்காட்சிகளை பக்திப்படங்களில் காட்ட முடியாது.
அன்புடன் வி. ஜீவகுமாரன்

« PREV
NEXT »

No comments