Latest News

December 20, 2012

பல்கலை விவகாரம்! யாழ். படைத்தளபதி ஹத்துருசிங்கவின் அழைப்பை நிராகரித்த பீடாதிபதிகள்!
by admin - 0

நாளை வெள்ளிக்கிழமை பலாலியில் மாநாடொன்றை நடத்த யாழ். மாவட்ட இராணுவத்தளபதி ஹத்துருசிங்க விடுத்த அழைப்பினை பல்கலைக்கழக பீடாதிபதிகள் முற்றாக நிராகரித்து விட்டனர்.
அத்துடன், பலாலிக்கு சென்று பேச்சு நடத்த வேண்டிய தேவை தமக்கில்லையென தெரிவித்துள்ள பீடாதிபதிகள் மீண்டும் குடாநாட்டில் இராணுவ ஆட்சியொன்றை முழுமையாக கொண்டுவர அது வழிகோலிவிடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்னதாக விஞ்ஞான பீடாதிபதியும் தொடர்ந்து கலைப்பீடாதிபதியும் அதே நிலைப்பாட்டினை எடுத்துக்கொண்டுள்ளதுடன், மருத்துவ பீடாதிபதியும் அத்தகைய தீர்மானத்தையெடுத்து துணைவேந்தருக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

பலாலியில் படைத்தலைமையினை சந்திப்பதெல்லாம் எமது கடைமையல்லவென தெரிவித்துள்ள பீடாதிபதிகள், அப்பணியினை தேவையாயின் பேரவை கையாளட்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதே வேளை ஏனைய பீடாதிபதிகளும் அதே முடிவையே எடுக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக கொழும்பில் பாதுகாப்பமைச்சின் செயலாளருடனான அண்மைய சந்திப்பின் போது அவர்கள் அவமதிக்கப்பட்டமை அவர்களை இவ்வாறு சீற்றங்கொள்ள வைத்திருக்கலாமென சில தரப்புகள் ஊகங்களை வெளியிட்டுள்ளன.

இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யும் வரையில் பகிஸ்கரிப்பு போராட்டத்தை கைவிடுவதென்ற பேச்சிற்கே இடமில்லையென பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று தெளிவுபட அறிவித்து விட்டது.

பல்கலைக்கழக துணைவேந்தரது அழைப்பின் பேரில் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் அவரை சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

அவ்வேளையில் பல்கலைக்கழகத்தில் கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக பேசப்பட்ட வேளையிலேயே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களையும் விடுவிக்கும் வரையில் போராட்டத்தை விலக்கி கொள்வதென்ற பேச்சிற்கே இடமில்லையென மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.



« PREV
NEXT »

No comments