Latest News

October 24, 2012

இளையராஜாவின் இன்னிசை நிகழ்வு ! மாவீரர் மாதத்தில் தான் நடத்தப்படவேண்டுமா ?
by admin - 0

கனடாவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இளையராஜாவின் இன்னிசை நிகழ்வு ! மாவீரர் மாதத்தில் தான் நடத்தப்படவேண்டுமா ? என்று ஈழத் தமிழர்கள் கேள்விகேட்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனை அடுத்து உணர்வாளர் சீமான் அவர்கள், இந் நிகழ்வை புறக்கணியுங்கள் என்று அறிவித்தல் விட்டார். ஆனால் இதனையே அரசியலாக்கி சில அதிமேதாவிகள், இதனை ஏன் புறக்கணிக்கவேண்டும் ? உண்மையில் இது மாவீரர் மாதத்தில் நடக்கவில்லை என்கிறார்கள் ! இது என்ன வேடிக்கை என்று நினைக்கவேண்டாம். விடுதலைப் புலிகள் நவம்பர் மாதத்தை கார்த்திகை என்றும், டிசம்பர் மாதத்தை மார்கழி என்றும் அழைக்கிறார்களாம். ஆனால் தமிழ் நாட்டில் உள்ளவர்கள், நவம்பர் 15ம் திகதிக்கு பின்னர் தான் கார்த்திகை என்று அழைக்கிறார்களாம், என்று இதற்கு புது விளக்கம் வேறு சொல்லப்படுகிறது. எனவே தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு அது கார்த்திகை மாதம்(நவம்பர் மாதம்) இல்லை என்கிறார்கள். அதனால் இளையராஜா அவர்கள் தாராளமாகப் பாடலாம் என்கிறார்கள் சிலர். தமிழ் நாட்டில் உள்ள கட்சிகள், அதில் உள்ள சில முக்கிய பிரமுகர்கள் தமக்குள் இருக்கும் காழ்ப்புணர்வுகளை ஈழத் தமிழர் விடையத்திலும் வெளிப்படுத்துவது பெரும் வேதனைக்குரிய விடையமாக இருக்கிறது. அதாவது சீமான் ஒரு விடையம் தொடர்பாக ஒரு அறிவித்தலை வெளியிட்டால், அவரைப் பிடிக்காத பிறிதொரு தலைவர், அது ஈழப் பிரச்சனை என்று கூடப்பாராமல், அதனை எதிர்த்து அறிக்கை விடுவார். இந்தச் சாக்கடை அரசியலை, தமிழ் நாட்டில் மட்டுமல்லாது, தற்போது புலம்பெயர் நாடுகளுக்கும் ஏற்றுமதிசெய்கிறார்கள் சில அரசியல்வாதிகள். நவம்பரில் இளையராஜா ஏன் இன்னிசை மழைபொழியக்கூடாது என்று ஒரு பட்டிமன்றம் வைக்கும் இவர்களுக்கு சில தகவல்களைக் கூற ஈழத் தமிழன் என்ற முறையில் நான் கடமைப்பட்டுள்ளேன். தேசிய தலைவரது பிறந்த நாள், நவம்பர் 26ம் திகதி தமிழீழத்தில் கொண்டாடப்படுகிறது. அதனைக் கொண்டாடிவிட்டு மறுநாள் மாவீரர் தின நாளை துக்கநாளா அனுஷ்டிப்பது இல்லையா ? என்று கேட்கிறார்களே ! எப்போது ஐயா தேசிய தலைவரது பிறந்த நாள் வெகு விமர்சையாக நடந்துள்ளது ? வட கிழக்கில் உள்ள மக்களும் போராளிகளும் தமக்கு பிடித்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்பை வழங்குவார்கள். அது தான் அவரது பிறந்தநாள் அடையாளம். இது ஈழத்தில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும். மாவீரர் நாளுக்கு முதல் வாரமே ஈழத்தில் உள்ள தெருவெங்கும் சோக கீதங்கள் இசைக்கப்பட்டு, மாவீரரின் குடும்பங்கள் கெளரவிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக இம் மாதத்தில் ஈழத்தில் பெரிய நிகழ்வுகள் நடத்தபடுவது பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு வந்துள்ளது. இப்படி இருக்கையில், நவம்பர் 3ம் திகதி தானே நாம் இன்னிசை நிகழ்வை நடத்துகிறோம் என்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள். சரி இம் முறை ஓம் நடத்துங்கள் என்று விட்டுவிட்டால், அடுத்த வருடம் அதை நவம்பர் 10ம்
திகதியாக மாற்றி பின்னர், அதனை நவம்பர் 20 ஆக்கி அதற்கு பின்னர் நவம்பர் 27 ஆகவும் மாற்மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் ? அப்போது எங்கே போய் முறையிடுவது. சிங்களவன் மோடையன் என்று சொல்லிச் சொல்லியே, தமிழர்கள் புத்தி இழந்ததால் தான் இன்று இவ்வளவு பின்னடைவையும் நாம் எதிர்கொண்டு நிற்கிறோம். புலம் பெயர் நாடுகளில், கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில், தமிழர்கள் மிகவும் பலமாக உள்ளார்கள். இவர்களின் தேசிய அடையாளங்கள் என்ன என்று கேட்டால் அது மாவீரர் தினம் தான். அதன் பின்னர் முள்ளிவாய்க்கால் தினமும் அடங்குகிறது. இவ்விரு நிகழ்வுகளையும் உடைத்தால் போதும், சிங்களம் 100% வீத வெற்றியை அடைந்துவிடும். இந்த ஏக்கத்தில் தான் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதனை ஏன் இவர்கள், இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை ? ஒரு வருடத்தில், இருக்கும் 12 மாதங்களில், நவம்பர் மாதம் மட்டும் தான் கிடைத்ததா இவர்களுக்கு ? வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல தமிழர்கள் நெஞ்சில் மெல்ல மெல்ல நஞ்சைக் கலக்க முயல்வது யார் ? இன்னிசை நிகழ்வுகள் என்று பாடகர்களை இலங்கைக்கு அழைத்தது யார் ? பின்னர் அவர்கள் ஏன் பாடாமல் ஓடிவந்தார்கள் ? இதை எல்லாம் நாம் நினைத்துப் பார்க்கவேண்டாமா ? சரி எல்லாம் போகட்டும்.. யார் இந்த இளையராஜா ? நல்ல ஒரு இசையமைப்பாளர் அவ்வளவுதான் ! ... ஈழத்துச் சோகங்களை சுமந்துவரும் ஒரு பாடலுக்கு மெட்டுப்போட்டாரா ? இல்லை ஈழத் தமிழர்கள் இன்னலுற்றவேளை தமிழ் நாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தி நிதிசேகரித்தாரா ? இல்லை கோடிக்கணக்கில் சேர்த்துவைத்திருக்கும் பணத்தில் கொஞ்சத்தை எடுத்து மண்டபம் முகாமில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு கொடுத்தாரா ? கேட்டால் நான் இசையமைப்பாளர், அரசியலில் ஈடுபடுவது இல்லை என்று நழுவி விழுவார்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் குழிரிலும் மழையில் உறையும் காலநிலையிலும், வேலைசெய்து உழைத்த பணத்தை பிடுங்க இசை நிகழ்ச்சிகளை நடத்தமட்டும் வரிந்துகட்டிக்கொண்டு முன் நிற்கிறார்களே ! இது எந்த வகையில் நியாயம் ?. அது சரி இவ்வளவு பிரச்சனை ஓடுகிறதே, ஏற்பாட்டாளர்களோ இல்லை இளையராஜாவோ எனது இசைநிகழ்வில் சேரும் பணத்தில் ஒரு சிறிய தொகையை நான் ஈழத் தமிழ் அகதிகளுக்கு கொடுக்கிறேன் என்று இப்போதாவது ஒரு வார்த்தையை விட்டார்களா ? அதுவும் இல்லையே ! அதாவது ஈழத் தமிழரின் உழைப்பை சுரண்டவேணும், ஆனால் உனக்கு ஏதாவது கஷ்டம் வந்தால் என்னைக் கேட்க்காதே நான், அதுக்கு உதவமாட்டேன் என்று சொவதைப் போல உள்ளது இவர்கள் நடவடிக்கை ! இந்தியக் கலைஞர்களை ஈழத் தமிழர்கள் மதிக்கிறார்கள். ஏன் ஒரு படி மேலேபோய் அவர்களால் எங்களுக்கு ஏதாவது விடிவு கிடைக்காதா என்று நினைத்து ஏங்குகிறார்கள். தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் மட்டும்தானா ஈழத் தமிழர்களுக்கு உதவவேண்டும் ? சினிமா துறையில் உள்ளவர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், தொழிலதிபர்கள், எவரும் உதவக்கூடாதா ? அப்படி என்ன சட்டமா போட்டுள்ளார்கள் ? ஈழத் தமிழர்கள் இந்தியக் கலைஞர்களை மதிப்பதுபோல , எங்கள் உணர்வுகளையும் நீங்கள் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். நான் ஒரு கவிஞன், நான் கவிதை மட்டும் தான் எழுதுவேன் என்று சொல்லிவிட்டு மகாகவி பாரதி இருந்துவிட்டான ஏன்ன ? காலத்தின் தேவை கருதி, ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்க்க தனது கவிப் புலமையை அவன் பயன்படுத்தவில்லையா ? எனக்கு அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கிச் சென்றுவிட்டானா ? தன்னாலான உதவியை, இந்திய விடுதலைக்கு அவன் செய்திருக்கிறான். இதுகூடவா புரியவில்லை ? இன்று ஈழத் தமிழர்கள் எனது நண்பர்கள் என்று பேட்டி கொடுக்கும் இளையராஜா அவர்கள், நேற்று எங்கே இருந்தார் ? 2009ம் ஆண்டு எங்கே இருந்தார் ? நிலவிலா இல்லை செவ்வாய் கிரகத்திலா ? கனடாவில் வாழும் மானமுள்ள எந்தத் தமிழனும் இந் நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டான். இதனையும் மீறி மாவீரர் மாதத்தில் தான், நாம் இன் நிகழ்வை வைப்போம் என்று அவர்கள் அடம்பிடித்தால், இவர்கள் எந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக வேலைசெய்கிறார்கள் என்பதனை ஈழத் தமிழர்கள் அறிந்துகொள்வார்கள். இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல் என்ன என்பது எமக்கு புரியாத புதிரா என்ன ? அதிர்வுக்காக : வல்லிபுரத்தான்.
« PREV
NEXT »

No comments