
மங்காத்தா படத்தில் நடித்ததற்காக அஜீத்துக்கு சிறந்த வில்லன் விருதினை வழங்கியுள்ளது விஜய் டிவி.
விஜய் டி.வி. சார்பில் ஆண்டு தோறும் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 2011-ம் ஆண்டுக்கான விருதுக்குரிய நட்சத்திரங்கள் மற்றும் படங்களை ரசிகர்கள் தேர்வு செய்தனர்.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யூகிசேது, நடிகைகள் நதியா, லிசி, ஒளிப்பதிவாளர் ரத்தினவேல் ஆகியோர் நடுவர்களாக இருந்தார்கள். 143 படங்களில் இருந்து 34 விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.
விருது வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.
சிறந்த நடிகருக்கான விருது தெய்வத் திருமகள் படத்தில் நடித்ததற்காக விக்ரமுக்கு வழங்கப்பட்டது. இயக்குனர் பிரபுதேவா இவ்விருதை வழங்கினார். சிறந்த நடிகைக்கான விருதை எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தமைக்காக அஞ்சலி பெற்றார். சிம்ரன் இவ்விருதை வழங்கினார்.
சிறந்த திரைப்படத்துக்கான விருது எங்கேயும் எப்போதும் படத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த காமெடி நடிகர் விருதை சந்தானம் பெற்றார். பிடித்தமான நாயகன் விருது அஜீத்துக்கும், பிடித்தமான நடிகை விருது அனுஷ்காவுக்கும் வழங்கப்பட்டன.
சிறந்த பொழுதுபோக்கு நடிகருக்கான விருதை தனுஷ் பெற்றார். பிடித்த படத்துக்கான விருது 'கோ'வுக்கு வழங்கப்பட்டது. கோவை சரளா சிறந்த காமெடி நடிகைக்கான விருதை பெற்றார்.
சிறந்த இயக்குநர் விருது வெற்றி மாறனுக்கும் சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி.பிரகாசுக்கும் வழங்கப்பட்டன. சரத்குமார், உமா ரியாஸ் ஆகியோரும் சிறப்பு விருது பெற்றார்கள். சிறந்த பாடலாசிரியர் விருது வைரமுத்துக்கும், செவாலியே சிவாஜி கணேசன் விருது பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் வழங்கப்பட்டன.
விழாவில் கமலின் விஸ்வரூபம் படம் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
No comments
Post a Comment