Latest News

May 02, 2012

போலீஸ் ஐஜி பிரமோத்குமார் டெல்லியில் கைது? சிபிஐ போலீஸ் வளைத்து பிடித்தது?
by admin - 0

சென்னை ஆயுதப்படை ஐஜி பிரமோத்குமார் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தார். அவரை சிபிஐ போலீஸ் தேடி வந்தது. இந்நிலையில் அவரை டெல்லியில் வளைத்து பிடித்து கைது செய்ததாக தகவல் வருகிறது.


திருப்பூரில் செயல்பட்டு வந்த பாசி நிதி நிறுவனம் மூலம் நாடு முழுவதும் 52 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.650 கோடிக்கு மேல் டெபாசிட் பெறப்பட்டது. உறுதி அளித்தபடி முதலீட்டாளர்களுக்கு தொகை வழங்காததால், நிறுவன இயக்குனர்கள் மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகியோர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, குஜராத் என நாடு முழுவதும் முதலீடு பெறப்பட்டிருப்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இதற்கிடையே, பாசி இயக்குனர்கள் 3 பேரை மிரட்டி நிதி பெற்றதாக டிஎஸ்பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் அப்போது மேற்கு மண்டல ஐஜியாக இருந்த, தற்போதைய ஆயுதப்படை ஐஜி பிரமோத் குமார் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். தன்னை சிபிஐ கைது செய்யக்கூடும் என நினைத்த பிரமோத்குமார், மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். பின்னர் தலைமறைவான அவரை சிபிஐ அதிகாரிகள் தேடி வந்தனர்.


இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பிரமோத் குமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

சிபிஐ தரப்பில் வக்கீல் சந்திரசேகர் ஆஜராகி, முன்ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, ஐஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சுந்தரேஷ் தீர்ப்பளித்தார்.

‘மனுதாரர் மீது கடுமையான குற்றச்சாட்டு கூறப்பட் டுள்ளது. சிபிஐ போலீசார் மனுதாரரை காவலில் எடுத்து விசாரிப்பதுதான் உகந்தது என்று கருதுகிறேன். எனவே மனுதாரரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என தீர்ப்பில் நீதிபதி கூறினார்.

முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால் ஐஜி பிரமோத்குமாரை கைது செய்ய சிபிஐ போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து பிரமோத் குமார் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்குள் சிபிஐ தன்னை கைது செய்து விடுமோ என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, ஒரு மாத விடுப்பு முடிந்த நிலையில் அவர், மேலும் 10 நாள் விடுப்பு கேட்டு, ஆயுதப்படை கூடுதல் டிஜிபிக்கு கடிதம் அனுப்பிவிட்டு தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அவரது செல்போன் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. அவரை பிடிக்க சிபிஐ தனிப்படை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்நிலையில் டெல்லியில் அவரை சிபிஐ போலீஸ் சுற்றி வளைத்து கைது செய்ததாக தகவல் வருகிறது.


« PREV
NEXT »

No comments