புதுக்கோட்டைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ முத்துக்குமரன் இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.
முத்துக்குமரனுக்கு சுசீலா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முத்துக்குமரன்.
தேர்தல் பிரசாரத்தின்போது முத்துக்குமரின் குடும்பம் ஒரு துக்கத்தை சந்தித்தது. பிரசாரத்தின்போது அவரது தாயார் மரணமடைந்தார். இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் தீவிரப் பிரசாரம் செய்து வெற்றி பெற்றார் முத்துக்குமரன்.
தொகுதிப் பிரச்சினைகள் குறித்து சட்டசபையில் கேள்விகள் எழுப்புவதில் மிகுந்த ஆர்வம் காட்டியவர் முத்துக்குமரன். கடந்த சட்டசபைத் தொடரில் அதிக கேள்விகளைக் கேட்டவர் இவர்தான். தொகுதிப் பிரச்சினைகள் தொடர்பாக கேள்விகளை அடுக்கினார் முத்துக்குமரன்.
அதேபோல நதிகள் இணைப்பிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார். குறிப்பாக காவிரி-மணிமுத்தாறு-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் தொடர்பாக ஏகப்பட்ட கேள்விகளையும், விளக்கங்களையும் அதிகாரிகளிடம் தொடர்ந்து கேட்டு வந்தார் முத்துக்குமரன் என்று அத்துறையினர் கூறுகின்றனர்.
முத்துக்குமரன் மறைவுக்கு அத்தனை கட்சியினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
No comments
Post a Comment