Latest News

March 07, 2012

விஷம் கொடுத்து கொன்றுவிடுங்கள்! கோர்ட் வளாகத்தில் சசிகலா கணவர் நடராஜன் ஆவேசம்!
by admin - 0


தஞ்சையைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா கணவர் நடராஜன் மீது, திருச்சியைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் கொடுத்த மோசடி புகாரின் அடிப்படையில் அவர் மீது மீண்டும் ஒரு வழக்கு போடப்பட்டது.

வரதராஜன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் கஸ்டடியில் விசாரணை நடத்த அனுமதி கோரி திருச்சி 4வது நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த மனு 07.03.2012 அன்று விசாரணைக்கு வந்தது.


நடராஜன் சார்பில் வழக்கறிஞர் மலர்விழி, வழக்கறிஞர் விஜயன் ஆகியோர் வாதாடினார்கள். அரசு தரப்பில் வழக்கறிஞர் அசோகன் வாதாடினார்.


மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, மாலை 4 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார். பின்னர் மாலை 4 மணிக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி, போலீஸ் கஷ்டடியில் விசாரிக்கும் அளவுக்கு நடராஜன் மீது எந்த முகாந்திரமும் இல்லை. அதனால் போலீஸ் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.


இவ்வழக்கில் ஜாமின் வழங்கக்கோரி நடராஜன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


இதற்கிடையில் தஞ்சை விளார் பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் என்பவர் கொடுத்த புகாரில், நடராஜன் மீதும் நடராஜன் டிரைவர் பிரபு, அவருடைய மாமா சங்கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக 07.03.2012 அன்று மாலை திருச்சியில் இருந்து தஞ்சைக்கு நடராஜனை போலீசார் அழைத்துச் சென்றனர்.


தஞ்சாவூர் ஜெஎம் 2 நீதிமன்ற நீதிபதி முருகனிடம், நடராஜனை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி முன் நடராஜன் கூறியதாவது, திருச்சி கோர்ட்டில் கஸ்டடி கேட்டு போலீஸ் போட்ட மனுவை, விசாரித்த நீதிபதி தைரியமாக தள்ளுபடி செய்தார்.

அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத இந்த போலீஸ், என்னை பழிவாங்கும் நோக்கோடு, இயற்கை உபாதையை கழிக்கக் கூட எனக்கு அனுமதி கொடுக்காமல் என்னை அலைக்கழித்து கூட்டி வருவது மனித உரிமை மீறல். இந்த வழக்கு முற்றிலும் பொய்யான வழக்கு என்றார்.


இதையடுத்து நீதிபதி, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.


பின்னர் வெளியே வந்த நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், என் மீது போடப்பட்டிருப்பது பொய் வழக்கு. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் அனைத்து கேள்விகளுக்கும் ஜெயலலிதாவுக்கு சம்மந்தம் இல்லை. அதற்கு நான் தான் பொறுப்பு என்று எனது மனைவி சசிகலா அனைத்து சுமைகளையும் ஏற்றிக்கொண்டார்.


இந்த நிலையில் எங்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே எங்கள் மீது தொடர்ந்து பொய் வழக்குப் போட்டு வருவது, முதல் அமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவுக்குத்தான் அவப்பெயராக இருக்கும்.


இப்படி பொய் வழக்குகள் போடுவதற்கு பதிலாக, எங்கள் குடும்பத்தினரை வரிசையாக நிற்க வைத்து, யார் மீது தவறு இருக்கிறது என்று தெரிகிறதோ அவர்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிடலாம் என்று ஆவேசமாக பேசினார்.
« PREV
NEXT »

No comments