அவனுக்கு முதலில் கைலாசம் ( ஹீரோவின் நண்பன் ) நண்பனாக, பிறகு மற்ற சிறுவர்களும் சண்டையை விடுத்து சமாதானமாகி அவனுடன் நண்பர்களாகிறார்கள். இவர்களை தவிர மெரினாவிலேயே வாழ்க்கை நடத்தும் பிச்சைக்கார தாத்தா, குதிரை ஓட்டுபவன், பாட்டு பாடுபவர், ஆங்கிலம் பேசும் பைத்தியக்காரன், சிறுவர்களுக்கு ஆதரவு அளிக்கும் போஸ்ட் மேன், மெரினாவிற்கு வரும் காதல் ஜோடிகளான செந்தில் நாதன் (சிவகார்த்திகேயன் ) - சொப்பன சுந்தரி (ஓவியா) இவர்களை சுற்றி கதை நகர்கிறது.
இதுதான் கதை என்று படத்தில் எதுவும் இல்லை, படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு கதை இருக்கிறது. அங்கே சுண்டல் விற்கும் சிறுவர்களுக்கும் பல கனவுகள் இருப்பதும் அவர்கள் வாழ்வில் முன்னேற, அவர்களுக்கு படிப்பு அவசியம் என்பதையும் உணர்த்துவது தான் படத்தின் மெசேஜ். படத்தில் காமெடியைப் பற்றி சொல்லவேண்டுமானால், படத்தின் பல காட்சிகளை சொல்லவேண்டியதாக இருக்கும்.
ஒரு வாடகை வீட்டிலாவது தங்க வேண்டும் என்று ஆசைப்படும் சிறுமி அன்னமா ( ஜெயஸ்ரீ ), இப்படியே அனாதை பிணமா போய்விடுவோமோ... என்று நினைக்கும் தாத்தா, மெரினாவை நான் தான் வாடகைக்கு விட்டிருக்கேன் என்று சிரிக்க வைக்கும் மனநல நோயாளி போன்ற கதாபாத்திரங்கள் ஆழமாக அமைந்திருக்கின்றன. தங்க வீடு இல்லாமல், இரவில் மரத்தில் தூங்குவது, பின் ஒரு போட்டில் வாடகை கொடுத்து தங்கிக் கொள்வதும் உருக்கம்.
சிவகார்த்திகேயன் - ஓவியா காதல் காமெடி பலே! திங்குறதுக்காகவே காதலிக்கிற பொண்ணுங்க, ஒருத்தன ஆறு மாசமா பின்னாலயே அலையவிட்டு, அப்புறம் காதலிச்சு, அவன் பர்ஸ காலியாக்கி, அப்புறம் அவனுக்கு சங்கு ஓதிட்டு, அதே பீச்சுல புருஷனோட இருக்க, அதே பீச்சுல இந்தப் பக்கம் தேவதாஸா மாரிடுவான்னு நினைச்ச காதலன், வேற ஒரு பொண்ண கரெக்ட் பண்ணி காதலிக்கிற மெரினா காதலை, செம கலாய்யோட சொல்லி இருக்கார் இயக்குனர்.
சிறுவர்களை படத்தின் ஹீரோக்களாக பசங்க படத்திலேயே காண்பித்திருப்பார் பாண்டிராஜ். அதே பாணி இதிலும் இருக்கிறது. நீளமான பாடல் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம். பின்னணி இசை சேர்ப்புகளில் இன்னும் கொஞ்சம் கவனமாய் இருந்திருக்க வேண்டும். சில காட்சிகளில் அளவுக்கு மீறி சிரிக்க வைத்துவிட்டதால் படத்தின் உருக்கமான காட்சிகளில் தோய்வு ஏற்படுவது உண்மையே, இருந்தாலும் படத்தின் பல நல்ல விஷயங்கள் அதை மறக்கடிக்க செய்கிறது.
கமர்ஷியல் கலாட்டாக்கள் இல்லை என்று கூட சிலர் நினைக்கலாம், அதை எல்லாம் எடுப்பதற்கு வேறு சிலர் இருக்கிறார்கள், அதையே மீண்டும் எடுக்க பாண்டிராஜ் அவசியமில்லை என்றே தோன்றுகிறது. நல்ல படம் கொடுத்த பாண்டிராஜுக்கு வாழ்த்துகள். நாளைய வாழ்வுக்கு கல்வி அவசியம் என்பதை சமுதாயத்துக்கு உணர்த்தும் அவசியமான படமாகவே அமைந்திருக்கிறது மெரினா.
மெரினா - சிரிக்க... சிந்திக்க!
No comments
Post a Comment