Latest News

February 28, 2012

தசரதனுக்கு கூனி தமிழருக்கு கூட்டமைப்பு
by admin - 0

ஐ.நா. மனிதவுரிமை ஆணைக்குழுவின் 19 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாகிவிட்டன. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப் பதில் அமெரிக்கா திடசங்கற்பம் பூண்டுள்ளது. அதேநேரம் தமக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேறுவதைத் தடுப்பதற்காக இலங்கை அரசு பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறது. இந் நிலையில் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனிதவுரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கையயான்றை வெளியிட்டுள்ளார். இதில் ஜெனிவா கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாமைக்குத் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘... தற்போது நிலவும் நிலையற்ற நிலைமை தொடருமேயானால் அது வன்முறைக்கு வித்திடலாம். குடிமக்கள் அதனால் மீண்டும் பாதிக்கப்படலாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அஞ்சுகிறது. தற்போதைய சூழ்நிலையில் அமைதிகாக்கப்படுவதும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதும் அவசியமான செயற்பாடுகள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது. எனவே இந்தக் காரணங்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவில் பிரசன்னமாகியிருக்க மாட்டாது.’ இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். சம்பந்தன் தெரிவித்த கருத்துக்களின் சாராம்சம் என்னவென்று ஆராய்ந்தால், தற்போது நாட்டின் நிலைமை சரியாக இல்லை. ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறினால்-அந்தக் கூட் டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பங் கேற்றிருந்தால் நாட்டில் கலவரம் ஏற்படும் என்று சம்பந்தன் அஞ்சுகிறாராம்.

வன்னியில் மிக மோசமான போர் நடந்த போது இந்தியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த என்.கே.நாராயணனைத் தனிப்பட்ட முறையில் சந்தித்த சம்பந்தனுக்கு வன்னியில் நடந்த வன் யுத்தம்-அழிவு தெரியவில்லை. ஆனால், இப்போது வன்முறை வெடிக்கும் என்று அச்சமாம். அப்படியானால் எங்களுக்காக வெளிநாடுகள் ஏதாவது செய்யட்டும். நாம் ஒதுங்கிக் கொள்வோம் என்பது கூட்டமைப்பின் முடிபு. இதுதான் முடிபாக இருந்தால் நீங்கள் உங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருக்க வேண்டும்.

அப்போதுதான் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் கொண்டுவரும் போது தமிழர்கள் தரப்பில் கருத்து கூறுவதற்கு கூட அங்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லை என்று பேசப்படும். ஆனால் நீங்களோ! ஆ! கடவுளே! இப்படியயாரு முடிபா? கூனியை இனங்காணாத தசரதனும் உங்களை புரிந்துகொள்ள முடியாத ஈழத்தமிழ் மக்களும் மிகப்பெரும் பாவங்கள். ஆனாலும் அடுத்த தேர்தலிலும் நீங்கள்தான் தாயகக் கோட்பாட்டின் காவலர்கள். என் செய்வோம் இறைவா!சங்கு
« PREV
NEXT »

No comments