ரேஸ்- 2 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு, பின்னர் அதை பாதியில் விட்டுவிட்டு வந்துவிட்டதால் தீபிகா படுகோன் பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார்.
அவர் மீது ரேஸ் 2 பட தயாரிப்பாளர் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
தமிழில் ரஜினியுடன் ராணா படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானார் தீபிகா. பட தொடக்க விழாவிலும் பங்கேற்றார். ரஜினிக்கு உடல் நலம் குன்றியதால் அந்தப் படம் தள்ளிப்போனது.
ரஜினி உடல் நலம் தேறியதும் ராணாவுக்குப் பதில் கோச்சடையான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்த நிலையில் ரேஸ்-2 இந்தி பட தயாரிப்பாளர் ரமேஷ் தாரணி மும்பையில் உள்ள சினிமா கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தீபிகா படுகோனே மீது ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், "நான் டிப்ஸ் பிலிம்ஸ் சார்பில் ரேஸ் 2 இந்திப் படத்தை தயாரித்து வருகிறேன். இதில் கதாநாயகியாக தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் ஒரு வாரம் படப்படிப்பில் பங்கேற்று நடித்துக் கொடுத்தார். இப்போது திடீர் என்று ரேஸ் 2 படத்தில் இருந்து விலகிக் கொள்வதாகக் கூறுகிறார்.
வேறு பட வாய்ப்பு வந்ததை தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். இதனால் ரேஸ் 2 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற முடியாமல் தடைபட்டு எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் பற்றி தயாரிப்பாளர்கள் சங்கம் தீபிகா படுகோனேக்கு தகவல் தெரிவித்து விளக்கம் அளிக்குமாறு கூறியுள்ளது. இந்திப்பட உலகில் சினிமா சம்பந்தப்பட்ட புகார்களை முதலில் சினிமா கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் விசாரிக்கும் அது தனது அறிக்கையை மேற்கு பிராந்திய (மும்பை) சினிமா தொழிலாளர்கள் சங்கத்துக்கு அனுப்பி வைக்கும். புகார் கூறப்பட்டவர்கள் விசாரணை குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இதில் சங்கம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். இல்லையெனில் அவருக்கு ரெட் கார்டு போட்டுவிடுவார்கள்.
என்ன செய்யப் போகிறார் தீபிகா?
No comments
Post a Comment