Latest News

February 06, 2012

ஆடுகளின் காதுகளை அறுத்து சந்தையில் விற்கும் கொடுமை
by admin - 0

சென்னை: தமிழக அரசு வழங்கிய விலையில்லா ஆடுகள் (அதாவது இலவசம்) தற்போது கொடூரமான முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனவாம். அதாவது அரசு கொடுத்த ஆடுகளின் காதுகளை மட்டும் அறுத்து நல்ல விலைக்கு விற்க ஆரம்பித்துள்ளனராம் சிலர்.

அதிமுக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்று, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள விவசாயிகளுக்கு இலவசமாக ஆடு, மாடு வழங்குவது.

தமிழக அரசு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள விவசாயிகளின் மேம்பாட்டுக்காக, ரூ. 10 ஆயிரம் மதிப்பீட்டில் நான்கு விலையில்லா ஆடுகளை வழங்கிறது. இலவசமாக வழங்கப்படும் ஆடுகளுக்கு அடையாளமாக, அதன் காது ஒன்றில், அரசு முத்திரை மற்றும் அடையாள எண் அடங்கிய, பிளாஸ்டிக் ஐடி கார்டைப் பொருத்தியுள்ளனர்.

இந்த எண்ணை ஆதாரமாக வைத்தே பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு இன்ஸ்சூரன்ஸ் வழங்கப்படும். இந்த பிளாஸ்டிக் கார்டை கழற்ற முடியாது.

இந்த நிலையில் சில விஷமிகள் என்ன செய்கிறார்கள் என்றால் அரசு கொடுத்த ஆடுகளை நல்ல விலைக்கு விற்க ஆரம்பித்துள்ளனராம். காதில் உள்ள அடையாளத்தை எடுக்க முடியாது என்பதால் காதையே வெட்டி எடுத்து விடுகிறார்களாம்.

சேலம் மாவட்டம் கொளத்தூர் சந்தையில் இந்த காதறுக்கப்பட்ட ஆடுகளை அமோகமாக விற்று வருவதை சர்வ சாதாரணமாக பார்க்கலாம். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடக்கும் சந்தையில் ஆடுகள் விற்பனைக்கு வைக்கப்படும். இங்குதான் இந்த காதறுக்கப்பட்ட அரசு ஆடுகளையும் கொண்டு வந்து விலைக்கு விற்கிறார்கள்.

அரசு கொடுத்த ஆடுகளை இப்படி ஈவு இரக்கம் இல்லாமல் காதுகளை அறுத்து விற்பதை அரசு உடனடியாக தடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
« PREV
NEXT »

No comments