அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஈரான் தான் அமைத்துள்ள அணு உலையில், எரிபொருளை நிரப்பும் பணியை நேற்று தடபுடலாக தொடங்கியது. இதனால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
ஈரான் தலைநகர் டெக்ரானின் வட பகுதியில் உருவாக்கப்பட்ட அணுசக்தி நிலையத்தில் உள்ள அணுஉலையில் எரிபொருளை நிரப்பும் பணியை ஈரான் அதிபர் மகமூத் அகமதினேஜாத் நேற்று தொடங்கி வைத்த காட்சியை அந்நாட்டு தொலைக்காட்சி நேரலையாக ஒளிபரப்பியது..
நிகழ்ச்சியில் ஈரான் அதிபர் பேசுகையில்,
ஈரான் அணுசக்தி தொழில்நுட்பத்தை பெறுவதை மேற்கு நாடுகள் தடுக்க முயல்கின்றன. இந்த அணுசக்தி நிலையம் மூலமாக ஈரான் அணுகுண்டு எதையும் தயாரிக்கப்போவதில்லை. ஈரான் அணுசக்தி தொழில்நுட்பத்தை பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார் அவர்.
அணு ஆயுதங்களை உருவாக்க தேவையானது யுரேனியம் எரிபொருள். இதனை தூய்மைப்படுத்தவும் குறைந்த சேதாரத்தில், மிக விரைவாக உருவாக்கவும் சூப்பர்சோனிக் வேகத்திலான நான்காம் தலைமுறை சென்ட்ரிபிஜஸ் எனப்படும் பிரிப்பானை உருவாக்கி இருக்கிறது ஈரான்.
ஈரானில் மேலும் புதிதாக நான்கு அணு ஆராய்ச்சி நிலையங்களையும் அந்நாட்டு அதிபர் வழங்கியுள்ளார்.
ஈரானின் அணுஆயுத நடவடிக்கையைத் தடுக்கும் வகையில் அண்மையில் இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவை ஈரான் மீது தடை விதித்திருந்த நிலையில் இத்தகைய அதிரடி அரங்கேற்றியிருக்கிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரானின் அணுசக்தி வல்லமை பிரகடனத்தை நிராகரித்துள்ளன.
ஈரான் மீது போர் தொடுத்தாக வேண்டும் என்று இஸ்ரேல் கொக்கரித்து வரும் நிலையில் அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் மத்திய கிழக்கு கடற்பரப்புக்கு விரைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
No comments
Post a Comment