Latest News

January 23, 2012

நாடாளுமன்ற மட்டத்தில் அதிமுகவுடன் உறவு வளர்ந்து வருகிறது-அத்வானி
by admin - 0

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இல்லாவிட்டாலும் கூட பாஜகவின் இயல்பான கூட்டாளியாக அதிமுக விளங்குகிறது. அக்கட்சியுடன், நாடாளுமன்ற மட்டத்தில் நாளுக்கு நாள் உறவு வளர்ந்து வருகிறது என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.



இதன் மூலம் வருகிற லோக்சபா தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி அமைவதற்கான சாத்தியக் கூறுகளை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளதாக கருதப்படுகிறது.

இதுகுறித்து தனது பிளாக்கில் அத்வானி எழுதியிருப்பதாவது...

மாநில அரசுகள் மீதான தனது போக்கை சர்வாதிகாரமாக மேற்கொண்டு வருகிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. எனவே வலுவான மத்திய-மாநில அரசுகள் உறவை விரும்பும் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

மாநிலங்கள் வலுவாக இருக்க வேண்டும் என்பது மத்திய அரசு பலவீனமாகப் போக வேண்டும் என்று அர்த்தம் இல்லை. மத்தியிலும் வலுவான அரசு இருக்க வேண்டும். அதேபோல மாநிலங்கள் வலுவாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் மத்திய அரசாக அது இருக்க வேண்டும். மாநிலங்கள் பலமாக இல்லாவிட்டால் மத்திய அரசு பலமாக இருக்க முடியாது.

இந்தப் பிரச்சினையை சமீபத்தில்நடந்த தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா எடுத்துரைத்தார்.

பாஜகவின் இயல்பான கூட்டாளியாக அதிமுக விளங்குகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக ஒரு அங்கமாக இல்லை என்றாலும் கூட நாடாளுமன்ற மட்டத்தில் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையிலான உறவு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. இது பாராட்டுக்குரியது.

தமிழகத்தில் நான் ஜன் சேத்னா யாத்திரை மேற்கொண்டபோது நான் சென்ற பாதையில் வைக்கப்பட்ட வெடிகுண்டை தமிழக காவல்துறையினர் தக்க சமயத்தில் கண்டெடுத்தனர். இதற்காக நான் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி கூறினேன் என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் அத்வானி.
« PREV
NEXT »

No comments