Latest News

January 29, 2012

கோடையில் கோழிகளுக்கு தண்ணீர் பராமரிப்பு
by admin - 0


கோழிகள் தீவனம் இல்லாமல் பல நாட்களுக்கு உயிர்வாழும். ஆனால் தண்ணீர் இல்லாமல் அவற்றால் உயிர்வாழ முடியாது. கோழிகளைப் பொறுத்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும். கோடை காலங்களில் சுற்றுப்புற வெப்பத்தை குறைப்பதில் தண்ணீர் பெரும்பங்காற்றுகிறது.
வணிக அளவில் வளர்க்கப் படும் இறைச்சிக்கோழிகளுக்கு அவை உண்ணும் தீவனத்தைப் போல இரு மடங்கு தண்ணீர் தேவை. கோடையில் கோழிகளின் உடலிலிருந்து கூடுதலாக வெப்பம், அவை விடும் மூச்சுக் காற்றின் மூலமே வெளியேறுகிறது. பறவைகளைப் பொறுத்தமட்டில் வியர்வைச் சுரப்பிகள் இல்லாத காரணத்தால் கூடுதலாக உண்டாகும் உடல்வெப்பத்தை வியர்வை மூலம் வெளியேற்ற இயலாது. எனவே கோழிகளால் சுவாசக் காற்று மூலம்தான் உடல் சூட்டினை தணித்துக் கொள்ள முடியும். இதற்காக கோழிகளுக்கு பெருமளவு தண்ணீர் தேவைப் படுகிறது.
கோடையில் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப அயர்ச்சியைக் குறைக்க தகுந்த தண்ணீர் கொடுப்பதன் மூலம் குறைக்கலாம். இத்துடன் தாது உப்புக்களையும் போதிய அளவு சேர்த்துக் கொடுத்தால் வெப்ப அயர்ச்சி குறைபாட்டை நீக்குவதுடன் கோழிகளுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுகின்றன.
தண்ணீரில் நோய் உண்டாக்கும் கிருமிகளின் அளவைக் குறைக்க குளோரின் பவுடர், அயோடின் கலவைகள், ஹைட்ரஜன் பெர் ஆக்சைடு போன்றவற்றை பயன் படுத்தலாம். இதில் குறைந்த செல வில் குளோரின் வாயுவைப்பெற 1000 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் வரை பிளீச்சிங் பவுடரைப் பயன்படுத்தலாம். அயோடின் தயாரிப்புகளை 10 லிட்டருக்கு 1 மிலி வீதம் பயன்படுத்தலாம்.
தரமற்ற குடிநீர் கோழிக்கு ரத்தக்கழிச்சல், சால்மோனல்லோசிஸ், கோலி பேசில்லோசிஸ் போன்ற நோய் பாதிப்புகளை உண்டாக்குவதுடன் அவற்றின் உற்பத்தி திறனையும் குறையச் செய்கின்றன.
முட்டையிடும் கோழிகள் முட்டையிட்டவுடன் அதிக அளவு தண்ணீரைக் குடிக்கும். இரவு நேரங்களில் வெளிச்சத்துக்காகப் போடப்படும் விளக்குகளை அணைப்பதற்கு முன்னும், அதிக தண்ணீர் அருந்தும். இறைச்சிக் கோழிகளைப் பொறுத்தமட்டில் சூரிய ஒளி பட்டவுடன் அல்லது செயற்கையாக வெளிச்சம் அளித்தவுடன் அதிக அளவு தண்ணீர் குடிக்கும். எனவே கோடையின் வெப்பத் தாக்குதலை உணர்ந்து, தகுந்த அளவில், தரமுள்ள தண்ணீர் கோழிகளுக்கு வழங்க வேண்டும்.
« PREV
NEXT »

No comments