Latest News

January 28, 2012

உபவேந்தரை மாற்றுக: கிழக்கு பல்கலை மாணவர்கள் ஆரப்பாட்டம்
by admin - 0

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்சமயம் நியமிக்கப்பட்டுள்ள உபவேந்தரின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக வேறொரு நிரந்தர உபவேந்தரை நியமிக்குமாறும் கோரியும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் விரிவுரைகளை பகிஷ்கரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்கள் நேற்று நண்பகல் வந்தாறுமூலை வளாக முன்றலில் ஒன்றுகூடி கவன ஈர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் “வேண்டாம் … வேண்டாம் மீண்டும் பதில் உபவேந்தர் வேண்டும் .. வேண்டும் நிரந்தர உபவேந்தர்”,

“உயர்கல்வி அமைச்சரே கவுன்சில் சிபார்சு செய்த உபவேந்தர் நியமனம் எங்கே?” உட்பட பல்வேறு வாசக அட்டைகளை ஏந்தியவாறு தமிழிலும் சிங்களத்திலும் கோசங்களை எழுப்பினர்.

கிழக்குப் பல்கலைக் கழக கவுன்சில் உறுப்பினரான பேராசியர் நிமால் ரஞ்சித் அத்தநாயக என்பவரே உயர்கல்வி அமைச்சரினால் குறித்த பதவிக்கு நியமிக்ப்பட்டுள்ளார்.

தமது இந்த போராட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்ட பல்கலைக் கழக மாணவ அமைப்புகளின் பிரதிநிதிகள் “பல்கலைக்கழகத்திற்கு புதிதாக கவுன்சில் நியமிக்கப்பட்டு கவுன்சிலினால் உபவேந்தர் பதவிக்கு மூன்று பேர்கள் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. நிரந்தர உபவேந்தர் விரைவில் நியமிக்கப்படவேண்டிய இந்நேரத்தில் பதில் உபவேந்தராக புதியவரொருவர் நியமிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

பதில் உபவேந்தவராக தற்போது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர் கவுன்சில் உறுப்பினராக உள்ளார். அது மட்டுமின்றி நிரந்தர உபவேந்தர் பதவிக்கு கூட இவரது பெயர் சிபாரிசு செய்யப்படவில்லை. இவ்வாறான நிலையில் மீண்டும் பதில் உபவேந்தராக ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது பொருத்தமற்றதாகவே நாம் கருதுகிறோம்.

மாணவர்களாகிய எங்களது கோரிக்கை என்னவென்றால் உடனடியாக நிரந்தர உபவேந்தர் நியமிக்ப்படவேண்டும். அதுவரை தற்போது பதில் உபவேந்தர் பதவியிலுள்ள கலாநிதி கே.பிரேம்குமார் அப்பதவியில் இருக்க வேண்டும்” என மாணவர் பிரதிநிகள் பலரும் தெரிவித்தனர்.

தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை அல்லது சாதகமான முடிவு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் மாணவ பிரதிநிதிகள் தெரிவித்தனர்.


« PREV
NEXT »

No comments