Latest News

January 05, 2012

சேது சமுத்திர திட்டம்: மத்திய அரசிடம் நிபுணர் குழு அறிக்கையை கேட்கும் சுப்ரீம் கோர்ட்
by admin - 0

சேது சமுத்திர திட்டத்தை மாற்று பாதையில் அமைப்பது குறித்து பிரதமர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையை சமர்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.



சேது சமுத்திரத் திட்டத்தால் ஆதாம் பாலம்-ராமர் பாலம் சேதப்படுத்தப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.


இதையடுத்து சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த சர்வதேச குழுமத்தின் இந்தியப் பிரிவின் தலைவரான ஆர்.கே. பச்செளரி தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவை பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதம் நியமித்தார்.

இந்தக் குழுவினர் தனுஷ்கோடியில் ஆய்வு நடத்தினர். இந்நிலையில் அந்த குழுவின் ஆய்வறிக்கையை சமர்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேது சமுத்திர திட்டம் கடந்த 2005ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு வந்த பகுதியான ஆறாவது வழித் தடத்தில் ஸ்ரீராமனால் கட்டப்பட்டது என்று நம்பப்படும் ராமர் பாலம் உள்ளதால் அங்கு கால்வாய் பணிகள் மேற்கொள்ள பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அதிமுகவும் எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும், ராமர் பாலத்தை திட்டப் பணியாளர்கள் சேதப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments