மலைப்பகுதிகளில் பயிரிடப்படும் காய்கறிப் பயிர்களில் அதிக வைட்டமின் நிறைந்தது கேரட் பயிராகும். கேரட் கிழங்கில் அதிக அளவு வைட்டமின் ஏ மற்றும் கரேட்டின் நிறைந்துள்ளதால் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. மிலாய்டோகைனி கேப்லா என்ற இனத்தைச் சேர்ந்த வேர்முடிச்சு நூற்புழு 10-15 சதவீதம் மகசூல் இழப்பினை ஏற்படுத்துகிறது. இது வெப்பம் குறைந்த மலைப்பிரதேசங்களில் வாழும் தன்மைஉடையது.
இந்நூற்புழு வேரினுள் முழுவதுமாக உட்புகுந்து ஊசி போன்ற உணவு குழல் (அலகு) மூலம் செல்களை துளைத்து சாற்றை உறிஞ்சி வாழ்கிறது. முதிர்ச்சிஅடைந்த ஒரு பெண் நூற்புழு 500 முதல் 1000 வரை முட்டைகளை இடும் தன்மைஉடையது. பொதுவாக நூற்புழுக்கள் கண்ணுக்கு தெரியாது. நுண்ணோக்கியின் மூலமாக மட்டுமே பார்க்க முடியும். இதனால் விவசாயிகளுக்கு எளிதில் இதன் தாக்குதலை அறிய முடிவதில்லை. இருப்பினும் கீழ்க்காணும் அறிகுறிகள் மூலம் நூற்புழுக்கள் தாக்கத்தை அறியலாம்.
அறிகுறிகள்:
* நூற்புழுக்கள் வேர்பகுதிகளை சேதப்படுத்துவதால் செடிகளுக்கு தேவைப்படும் நீர் மற்றும் சத்துப்பொருட்கள் தடுக்கப்படுகிறது. இதனால் செடிகளின் வளர்ச்சி குன்றி இலைகள் மஞ்சளாகவும் அதனை தொடர்ந்து காய்ந்தும் காணப்படும்.
* கேரட் கிழங்கின் மேற்பரப்பில் உண்டாகும் பக்க வேர்களில் முடிச்சுகள் (அல்லது) கழலை போன்ற அமைப்பு காணப்படும்.
* தாக்குதல் அதிகமாகும்பொழுது கிழங்குகள் இரண்டாக பிரிந்து ஒழுங்கற்ற உருவத்துடன் "கவட்டை' போன்று காணப்படும். இதனால் சந்தை மதிப்பு குறைகிறது.
* நூற்புழுக்கள் உண்டாக்கிய வேர் காயங்கள் வழியாக பூஞ்சாணங்கள் உட்புகுந்து பின்நோக்கி வாடல் நோயின் தாக்கத்தை அதிகப்படுத்துகிறது.
மேலாண்மை முறைகள்:
* கோடைகாலங்களில் ஆழ உழவு செய்து நிலத்தை 1-2 மாதங்களுக்கு தரிசாக விடுதல்.
* தொழு உரம், மண்புழு உரம், கம்போஸ்ட் மற்றும் பசுந்தாள் உரம் போன்றவற்றை தேவைக்கேற்ப இடுதல்.
* உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா போன்றவைகளை தலா 2 கிலோ/எக்டர் என்ற அளவில் விதைகள் நடுவதற்கு முன் இடுதல்.
* சூடோமோனாஸ் புளூரசன்ஸ் என்னும் பயிர் ஊக்கி பாக்டீரியாவை 2.5 கிலோவை 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து ஒரு எக்டருக்கு இடுதல்.
* கேந்தி (எ) செண்டு மல்லியை ஊடுபயிராக பயிர் செய்வதால் வேர்களில் இருந்து உண்டாகும் வேதிப்பொருள் நூற்புழுக்களை கவர்ந்து அழிக்கிறது.
* கேரட்டை தொடர்ந்து பயிர்செய்யாமல் முள்ளங்கி, ஸ்பினாச், பார்லி, கோதுமை மற்றும் பசுந்தாள் உரப்பயிர்களுடன் பயிர் சுழற்சி செய்தல்.
* நூற்புழுக்கள் அதிகமுள்ள வயல்களில் கார்போபியூரான் 3 சத குருணை மருந்தினை எக்டருக்கு 33 கிலோ இடுதல்.
மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பதன் மூலம் கேரட்டை சேதப்படுத்தும் நூற்புழுக்கள் மற்றும் மண் மூலம் உண்டாகும் நோய்களையும் கட்டுப்படுத்தி தரத்துடன் கூடிய அதிக மகசூலை பெறலாம்.
No comments
Post a Comment