Latest News

January 18, 2012

முற்கம்பிக்குள் முடங்கி வாழக்கூட மனிக்பாம் முகாம் மக்களுக்கு உரிமை இல்லை!
by admin - 0


வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள, மீள்குடியேற்றத்துக்காக காத்திருக்கின்ற குடும்பங்களில் ஒரு பகுதியினரை அவர்கள் இருக்குமிடத்தில் இருந்து வேறிடத்திற்கு மாறி குடியிருக்குமாறு அங்குள்ள அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக அந்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மனிக்பாம் இடைத்தங்கல் முகாமுக்குள்ளேயே இடத்திற்கு இடம் தம்மை மாற்றிக் கொண்டிருக்கும் இந்த நடவடிக்கைகளைக் கைவிட்டு, தங்களை விரைவில் தமது சொந்த இடமாகிய முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்ற வேண்டும் என்று அந்த மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

மனிக்பாம் கதிர்காமர் முகாம் டி பிரிவில் உள்ள மக்களே வேறிடத்திற்கு, குறிப்பாக வசதிகளற்ற இடத்திற்கு 20 ஆம் திகதிக்கு முன்னர் செல்ல வேண்டும் என்று முகாம் அதிகாரிகள் வற்புத்தியிருப்பதாக அந்த முகாமைச் சேர்ந்த மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

எனினும் இது குறித்து மனிக்பாம் முகாமைச் சேர்ந்த அதிகாரிகளின் கருத்தை உடனடியாக அறிய முடியவில்லை.

அந்த மக்கள் இந்த விடயம் குறித்து, தன்னிடம் முறைப்பாடு செய்திருப்பதாக வன்னி மாவட்ட பாராடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்து பல்வேறு துயரங்களை அனுபவித்துள்ள இந்த மக்களை மனிக்பாம் முகாமுக்குள்ளேயே ஓரிடத்தில் இருந்து மற்றுமொரு இடத்திற்கு இடம் மாறியிருக்குமாறு கூறுவது மனிதாபிமானமற்ற நடவடிக்கை என சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டினார்.

இதுகுறித்து முல்லைத்தீவு அரசாங்க அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், உயர்மட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மேல் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.
« PREV
NEXT »

No comments