Latest News

January 27, 2012

சசி ஆதரவு அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி டிஸ்மிஸ்-2 பேர் புதிதாக சேர்ப்பு
by admin - 0


சசிகலா ஆதரவு அமைச்சர்கள் நீக்கப்படுவது எப்போது என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் முதல் வேட்டையைத் தொடங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. தீவிர சசிகலா ஆதரவு அமைச்சர்களான அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேற்று இரவு நீக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதில் என்.ஆர்.சிவபதி மற்றும் முக்கூர் சுப்பிரமணியம் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சசிகலா குரூப் வேட்டை முடிவே இல்லாமல் நீண்டு கொண்டிருக்கிறது. சசிகலா குடும்பத்தினரைத் தொடர்நது அவருக்கு நெருக்கமான கட்சிக்காரர்களும் விரட்டியடிக்கப்பட்டு வருகிறார்கள். இருப்பினும் அமைச்சர்கள் மட்டத்தில் மட்டும் யாரும் மாற்றப்படாமல் இருந்து வந்தனர். கிட்டத்தட்ட 15 அமைச்சர்களின் பட்டியல் முதல்வர் ஜெயலலிதா கையில் இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

இந்த நிலையில் முதல் வேட்டையை நேற்று இரவு நடத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. சசிகலாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்தவர்களான அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகிய இருவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

மீண்டும் அமைச்சரான சிவபதி

இரண்டு புதிய அமைச்சர்களையும் ஜெயலலிதா நியமித்துள்ளார். அவர்களில் ஒருவர் என்.ஆர்.சிவபதி. இவர் ஏற்கனவே அமைச்சராக இருந்தவர்தான். ஆனால் சசிகலா செய்த அரசியலில் சிக்கி இவர் பதவியை இழந்தார். தீவிர ஜெயலலிதா விசுவாசியான இவருக்கு மீண்டும் தற்போது அமைச்சர் பதவி கொடுத்துள்ளார் முதல்வர்.

முசிறி தொகுதி உறுப்பினரான சிவபதி, பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராகிறார்.

2வது புதிய அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம். அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அடாவடி அரசியலில் சிக்கி ஓரம் கட்டப்பட்டு வந்தவர் இவர். இதனாலேயே இவருக்கு இப்போது அமைச்சராகும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. செய்யாறு தொகுதி எம்.எல்.ஏவான சுப்பிரமணியம் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகிறார்.

செங்கோட்டையனுக்கு வருவாய்த்துறை

மூத்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் இலாகா மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. தற்போது அவர் வருவாய்த்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார். இவர் இது நாள் வரை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்து வந்தார்.

இன்று பதவியேற்பு

புதிய அமைச்சர்கள் இருவரும் இன்று பதவியேற்றுக் கொள்கின்றனர்.

7வது முறையாக மாற்றம்

முதல்வர் ஜெயலலிதா தனது அமைச்சரவையில் மாற்றம் செய்வது இது 7வது முறையாகும். அதிமுக ஆட்சிக்கு வந்தே 7 மாதங்கள்தான் ஆகிறது. எனவே சராசரியாக மாதம் ஒருமுறை அமைச்சரவை மாற்றம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments