Latest News

December 01, 2011

போராளி - ஓடாதே திருப்பியடி... சினிமா விமர்சனம்
by admin - 0

சசி - கனி சகோக்கள் மீண்டும் இணைந்திருக்கும் போராளி. எதிர்பார்த்த அதே விதமான எதார்த்தம், காமெடி, சண்டை என ஒரு கை பார்த்திருக்கிறார்கள். ரொம்ப யோசிக்காம, பார்ப்பவர்களை மண்டை குழம்பவிடாமல் சிம்பிளா, ஜாலியா, நியாமான கோபத்துடன் ஒரு படம் போராளி.
நம்மைச் சுற்றி தெருக்களில் யாரும் இல்லாதவராய் மனநோயாளிகள் பலரை நாம் பார்க்கக்கூடும். ஆனால் அவர்கள் அப்படி மாறுவதற்கு இந்த ஏதோ ஒரு வகையில் இந்த சமுதாயம் காரணமாக இருக்கிறது என்பதை சுறுக்கென சொல்லும் படம் போராளி. சசிக்குமாரும் நரேஷும் (இளங்குமரன் - நல்லவன்) புதுசா சென்னைக்கு வரும் நண்பர்கள். அவர்களுக்கு ஆதரவு தந்து பல விஷயங்களில் தனக்குத் தானே ஆப்பு வைத்துக்கொள்பவர் கஞ்சா கருப்பு (புலிக்குட்டி). புலிக்குட்டியின் டைமிங் காமெடி கலாட்டா, இவர்களை சுற்றிலும் வசித்துவரும் விதவிதமான மனிதர்கள், காம்பவுண்டுக்குள் நடக்கும் தினசரி ரகளைகள் என நாட்கள் நகர...
சசிக்குமாரும் நரேஷும் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கிறார்கள். விலகி விலகிச் செல்லும் சசிக்குமாரை விடாமல் துரத்தி துரத்தி காதலிக்கிறார் எதிர்வீட்டு ஸ்வாதி (பாரதி). ஒரு கட்டத்தில் காதலுக்கு ஓ.கே சொல்கிறார் சசிக்குமார். பெட்ரோல் பங்கில் கூட வேலை பார்க்கும் தமிழ்ச்செல்வியை சைட்டடிக்கிறார் நரேஷ். கிளி வேஷம் போட்டு துணிக் கடையின் வாசலில் குழந்தைகளை மகிழ்விக்கும் கஞ்சா கருப்பு, டைமிங் காமெடியால் அரங்கத்தையே அதிர வைக்கிறார்.

திடீரென கிராமத்தில் இருந்து வந்திரங்கும் ஒரு கும்பள் சசிக்குமாரையும் நரேஷையும் துரத்திக் கொண்டு ஓட, அவர்களோடு சேர்ந்து ஓடுகிறார்...

காரணம்? சசிக்குமாரும் நரேஷும் மனநோய் காப்பகத்தில் இருந்து தப்பித்து வந்தவர்கள் தான் என்ற செய்தி அறிந்ததும் காம்பவுண்டே ஸ்தம்பித்து போகிறது. உண்மையிலேயே அவர்கள் மன நோயாளிகள் தானா? இல்லை அது கட்டுக்கதையா?

அதற்கு காரணம் யார்? என்பதை விளக்கமாக சொல்கிறது படத்தின் இரண்டாவது பாதியாக வரும் ப்ளாஷ் பேக்.முதல் பாதியில் காமெடிக்கு பஞ்சமில்லை. அதே நேரத்தில் சாலையோர பிச்சைக்காரனை கழுவி சுத்தம் செய்து பளிச்சுன்னு ஆக்கி அவரை வேலை பார்க்க வைக்கிறாரே. ச்சே! அந்த உணர்வுக்கு வார்த்தைகளே இல்லை.

சிடுசிடுன்னு எப்போதும் சண்டைபோடும் ஸ்வாதி, முதல்ல இப்படி சண்ட போடுவீங்க, அப்புறம் எங்கள பார்த்து சிரிப்பீங்க, ஐ லவ் யூ சொல்வீங்க, அப்புறம் நாங்க நடுத்தெருவுல நிக்கனும் என்று சொல்லிக்கொண்டே போக... எம்மா, இப்போதானே வந்திருக்காங்க. அதுக்குள்ள நீ மூணு மணி நேர கதையவே சொல்லிட்ட... என்று கமெண்ட் அடிக்க தியேட்டரில் அப்படி ஒரு சிரிப்பு.

மருத்துவமனையில் அடிபட்டுக் கிடக்கும் ஸ்வாதி, பசியில் சசிக்குமாரிடம் சிலோன் பரோட்டா கேட்க, நமக்கு சிலோனே பிடிக்காது, இதுல சிலோன் பரோட்டா வேற... என்ற வசனம் தான் தியேட்டரில் அதிக கைத்தட்டல் வாங்கிய வசனம். முதல் பாதியில் கஞ்சா கருப்பு கலக்குகிறார் என்றால் இரண்டாம் பாதியில் பரோட்டா சூரி அசத்தியிருக்கிறார். காளைக் கன்றுக்குட்டியிடம் ’அந்த’ இடத்தில் இடி வாங்கியதும். உங்க மணி கெடச்சிருச்சி, எங்க மணி போச்சேன்னு சொன்ன காமெடியும், நாங்கல்லாம் அப்பவே அந்த மாதிரி இப்ப கேட்கவா வேணும் என்று அடிக்கடி சொல்லி அடி வாங்குவதும் சிரிப்போ சிரிப்பு.

இரண்டாவது பாதியில் நீளமான முடியுடன் வரும் சசிக்குமார். என்ன பார்த்த பூச்சாண்டி மாதிரியாடா இருக்கு என்று நண்பனிடம் கேட்டு நியாப்படுத்திக் கொள்வது ஆறுதல். படபடவென பேசும் ஸ்வாதி, காதல் கைகூடியதும் கண்ணீர்விட்டு அழுவது நெகிழ்ச்சி. தமிழ்ச்செல்வி என்று பெயர் வைத்த வசுந்த்ரா சென்னை லோக்கல் பாஷையில் பேசுவது சுவாரஸ்யம். ஆண்களுக்கு இணையாக சண்டைபோடும் நிவேதிதா மிரட்டல்.

படத்தின் முதல் பாதி மயில் இறகாய் வருடிவிட இரண்டாம் பாதியின் காட்சிகளில் ரத்தம் தெரித்து கொப்பளிப்பது அதிர்ச்சி. சிக்கலான திரைக்கதையை கொஞ்சம் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லி சபாஷ் வாங்குகிறார் சமுத்திரகனி. இருந்தாலும் இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

சுந்தர்.சி பாபுவின் இசை படத்துக்கு ஏற்ப இருந்தாலும் காதல் காட்சிகளில் ஆண் குரலையும் பெண் குரலையும் மாற்றி மாற்றி கத்த விட்டிருப்பது எரிச்சல். சம்போ சிவ சம்போ ஸ்டைலில் அமைந்திருக்கிறது கணபதி கணபதி பாடல்.நாடோடிகள் படத்தில், ஒரு கதையை நோக்கி அனைத்து கதாபாத்திரங்களும் பயணிக்கும். ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு காரணம் சொல்லி அதற்கான தேவையையும் உணர்த்தி இருப்பார் சமுத்திரகனி. அதே ஸ்டைல் இதிலும் தொடர்கிறது...

போராளி - ஓடாதே திருப்பியடி...
« PREV
NEXT »

No comments