Latest News

December 22, 2011

“ஒரு கையால விறகு கொத்தியும் விக்கிறன்”
by admin - 4

வன்னிப் பெருநிலத்தில் தமக்கென ஒரு சுயதொழிலை உருவாக்கி வாழ்ந்து கொண்டிருந்த பலரது வாழ்வு இன்று சிதைந்து சின்னா பின்னமாய்க் கிடக்கிறது. யுத்தம் இன்று நின்று போயிருந்தாலும் அது விட்டுச் சென்ற பாதிப்புக்கள் ஒட்டுமொத்த மக்களுடைய வாழ்க்கையில் மாறாத வடுக்களை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறது.
பலரது அவயவங்கள் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளன. இன்று அவர்கள் அவயவங்களை இழந்து, தொழில் இழந்து கஷ்டப்பட்டு தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

முறிகண்டிப் பிள்ளையார் கோயிலருகில் கச்சான் கடை வைத்திருக்கும் 34 வயதான ச. வசந்தகுமாரை கடந்தவாரம் சந்தித்தோம். நடந்துமுடிந்த யுத்தத்தில் தனது இடது கையை முழுமையாக இழந்துவிட்ட வசந்தனின் தாய் இறந்து ஏழு நாட்கள் என்பதால் தனது பெட்டிக்கடையை நேரத்தோடு மூடிவிட்டு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். ஒரு கையின் துணையால் சைக்கிளின் ஹாண்டிலைப் பிடித்தபடி ஏறி அமர எத்தனித்துக் கொண்டிருந்தவரிடம் எமக்காக சில நிடங்களைக் கேட்டோம்.

‘முறிகண்டிதான் எண்ட சொந்த இடம். கலியாணம் கட்டி ரெண்டு பிள்ளைகள் இருக்கு. ஒரு பிள்ளைக்கு நாலு வயசு. நர்சரி போகுது. ஒரு பிள்ள பிறந்து 4 மாசம். எனக்கு ஒரு தங்கை இருக்காள். அவள் கலியாணம் கட்டி பிள்ளைகள் இருக்கு. நானும் எண்ட மனைவியும் மாறி மாறி கடையைப் பார்த்துக் கொள்ளுவம்’ என்றவரிடம் இதற்கு முன் வாழ்ந்த நிலைமை, யுத்தத்தின் போது அனுபவித்தவை பற்றிக் கேட்டோம்.‘சண்டைக்கு முன் நான் கூலி வேலை செய்தன். அப்போ கூலி வேலைக்கு 500 ரூபா தருவாங்க. நான் ஒரு மேசன். தச்சு வேலையும் செய்வன். அப்போ நல்லா உழைச்சன்.

கடைசி சண்ட நடக்ககேக்க வீட்டாக்களோடு முள்ளிவாய்க்காலால வரேக்கதான் ஷெல் விழுந்தது. அதுல கை இல்லாமல் போய்ட்டுது. காயப்பட்டு வவுனியா ஆஸ்பத்திரியில் வச்சிருந்தவங்க. கையை எடுக்கமாட்டம் எண்டுதான் சொல்லியிருந்தாங்கள். பிறகு எடுத்திட்டாங்க. பிறகு வவுனியா வலயம் 6 முகாமுக்கு கொண்டு போய் வச்சிருந்தவங்க. அங்கயிருந்து கதிர்காமர் முகாமுக்கு ஏத்தினவங்கள். பிறகுதான் இங்க வந்தனாங்க. காயப்பட்ட உடனே நாங்க ஆமி கட்டுப்பாட்டு பகுதிக்குள்ள வந்திட்டம். அந்த நேரம் அரிசி எல்லாம் 3000, 4000 க்கு வித்தது. சீனி எல்லாம் 5000, 6000 ரூபாவுக்கு ஒரு கிலோவ வித்தாங்க. ஒரு சாமானும் வாங்கிறதுக்கு வசதியில்ல. பஸ் வழிய அங்க இங்க இடம்பெயர்ந்து போவம். கஞ்சி காய்ச்சி கொடுப்பாங்க. அத வாங்கிட்டு வந்துதான் எண்ட குடும்பத்த காப்பாத்தினன். முன்ன மாதிரி இப்ப ஒரு வேலையும் செய்ய ஏலாது. கை உளையிறது. மேல பிளேட் வச்சி இருக்கு. நிமித்த முடியாது” என முகத்தில் வலியின் ரேகைகள் படர வேதனையுடன் கூறினார்.யுத்தத்தில் அவயவங்களை இழந்தவர்களுக்கு செயற்கை உறுப்புகள் வழங்கப்படுகின்றனவே.. நீங்களும் அதற்கு முயற்சித்திருக்கலாமே?

‘நானும் எல்லோரிட்டயும் பதிஞ்சு தான் இருக்கிறன். கை இல்லாமல் போயும் எந்த நிறுவனமும் எனக்கு உதவி செய்யல்ல. மன்னாருக்கு ஒருக்கா வர சொல்லியிருந்தாங்க. அங்க போய் வாறதுக்கு என்னட்ட வசதியில்ல. அங்க 10 நாள் வச்சிருந்துதான் டெஸ்ட் எல்லாம் எடுத்து கை போடுவாங்களாம். நான் 10 நாள் அங்கு போயிருந்தால் எண்ட குடும்பத்தை பார்க்கிறதுக்கு யாரும் இல்ல. நிறுவன மெல்லாம் உதவி செய்யும் எண்டு சொல்லி எதுவும் செய்யல்ல. இங்க மீள்குடியேற்றும் போது 12 தகரம் தந்தவங்க. அதுமட்டும் தான். வேறு ஒண்டும் தரயில்ல. தண்ணி எடுக்கிறதெண்டாலும் நிறையத் தூரம் போய்த்தான் கொண்டு வரணும். கிணறு இல்லை. கிணறு வெட்டுறத்துக்கும் வசதியில்லை. எனக்கு கையிருந்தாலும் நான் கிணறு வெட்டுவேன்’ என்று கூறி வருந்தினார்.

கச்சான் வியாபாரம் எப்படி போகின்றது?

யாவாரம் பரவாயில்ல. நல்லாப் போகுது. ஆனால் முதல்தான் இல்ல. அதனால நான் ஒரு 10 கிலோ கடலை கடன் வாங்கி அத வித்திட்டு வாறன். ஒருநாளைக்கு ஆயிரம் ரூபாக்கிட்ட முதல் வேணும். வறுவல் கூலி என்று எல்லாமாக 2000 அப்பிடி வரும். கூலியக் கொடுத்துட்டு மிச்சத்தை எடுக்கிறன். எல்லாம் போக ஒரு நாளைக்கு 400, 500 ரூபா வருமானம் வரும். வேற சாமான்கள் அதாவது சோடா தண்ணீர்போத்தல் எல்லாம் கடையில் போட்டால் வியாபாரம் கூட போகும். அப்படி போடுவதற்கு வசதியில்ல. கடைக்கு கூலி கொடுக்கணும். ஒரு நாளைக்கு 75 ரூபா படி வாடகை கட்டணும். சில ஆக்களுக்கு கடை அடித்துக் கொடுத்திருக் கிறாங்க. நான் வியாபாரம் செய்து மிச்சம் பிடித்த காசில் தான் இந்தக் கடைய போட்டிருக்கன். நிவாரணம் கொடுத்திட்டு வந்தாங்க. அதில் அரிசி பருப்பெண்டு ஒரு 30 கிலோகிட்ட மாசத்துக்கு தருவாங்க. இப்ப அதையும் நிற்பாட்டிட்டாங்க. இந்த வேலையோட சேர்த்து ஒரு கையால விறகு கொத்தியும் விக்கிறன்’ என்றார்.

அவயவங்களை இழந்தாலும் தன்னம்பிக்கையை இன்னும் தளரவிடவில்லையென்பதை வன்னியில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு உறவுகளும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று எல்லா வசதிகளிந்து அவையவங்களெல்லாம் ஒழுங்காக இருந்தும்கூட பணத்திமிரும் பதவிமோகமும் பிடித்தலையும் எத்தனையோ பேரை பார்க்கின்றோம். கடவுள் எல்லாம் கொடுத்தும் சோம்பேறிகளாய் வாழும் பலபேரை சந்தித்திருக்கின்றோம். உண்மையில் அவர்கள் இங்கு வந்து இந்த மக்களைச் சந்தித்து இவர்களின் கதைகளைக் கேட்க வேண்டும்.

அவயவங்களை இழந்தும் மனம் தளராமல் தினம் தினம் வாழ்க்கையுடன் போராடி இன்னும் தம் சொந்த முயற்சியில் உழைத்து வாழும் இவர்கள் ஏனையோருக்கு நல்ல எடுத்துக்காட்டு.

சாகித்யா
« PREV
NEXT »

4 comments

சசிகலா said...

அவயவங்களை இழந்தும் மனம் தளராமல் தினம் தினம் வாழ்க்கையுடன் போராடி இன்னும் தம் சொந்த முயற்சியில் உழைத்து வாழும் இவர்கள் ஏனையோருக்கு நல்ல எடுத்துக்காட்டு.
சிறந்த பதிவு

Helper said...

Hi,

How can Help him?

Please let us know

Helper said...

Please let us know

How can we help this guy

Thanks

admin said...

sent ur contact no to our mail