நன்மைகள்: முழுமையான இயந்திர அறுவடை, அதிக கரும்பு எடை, அதிக மறுதாம்பு பயிருக்கு ஏற்றது, 25-40 விழுக்காடு நீர் சிக்கனம், களர் மண் மற்றும் உவர்ப்பு நீர் பகுதிக்கும் ஏற்றது. வேலை ஆட்களின் திறன் மற்றும் எண்ணிக்கை குறைவு. அதிக நிகர லாபம்.
நிலம் தயார் செய்தல்: முதலில் உளிக்கலப்பை கொண்டு உழவு செய்ய வேண்டும். பின்னர் சட்டி கலப்பை கொண்டு கட்டி இல்லாமல் உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் 12.5 டன் ஆலைக்கழிவுகளை இடவேண்டும். 25 செ.மீ. ஆழமும் 40 செ.மீ. அகலமும், 180 செ.மீ. இடைவெளியில் குழி தோண்ட வேண்டும்.
விதை கரணைகள் நடவு: குறுகிய கால (7-8 மாத) வயதுடைய விதை கரணைகள் தேர்வு செய்யவும். கரணைகள் வெட்டுவதற்கு முன் ஏக்கருக்கு 125 கிலோ யூரியாவை ஒவ்வொரு 15 நாட்களின் இடைவெளியில் இடவேண்டும். விதை கரணைகளை ஒரு மீட்டர் நீளத்திற்கு 8 இரு பருகரணைகளை தேர்வு செய்ய வேண்டும். கரணைகளை 0.5% கார்பன்டாசிம் கரைசலில் ஊறவைப்பதன் மூலம் நோய் பரவாமலும் பாதுகாக்கலாம். பக்க குழாய்களை குழிகளின் நடுவே வைத்து லேசாக மண்ணைக் கொண்டு மூடவேண்டும். கரணைகளை?குழியின் இரண்டு ஓரங்களில் பக்க குழாய்களை நடுவே வைத்து நடவு செய்ய வேண்டும். நடவுக்குப் பின்னர், மண்ணைக்கொண்டு கரணைகளை மூடவேண்டும். பக்க குழாய்களை கரணைகளுக்கும் அடியில் 5- 7.5 செ.மீ. ஆழத்தில் பதிக்க வேண்டும்.
சொட்டுநீர் அமைப்பு: நிலத்தடி சொட்டுநீர் உர பாசன முறைக்கு உட்புறம் சொட்டுவான்கள் உள்ள பக்க குழாய்களை தேர்வு செய்ய வேண்டும். பக்க குழாய்களை 20-30 செ.மீ. ஆழத்தில் கரணைகளுக்கு அடியில் சொட்டுவான்கள் மேல்புறம் பார்த்தவாறு அமைக்க வேண்டும். பக்க குழாய்களுக்கு இடையேயான இடைவெளி 180 செ.மீ. இருக்க வேண்டும். நீர் தொட்டிகளுக்கு இடையேயான இடைவெளி 60 செ.மீ. நீர் சொட்டும் திறன் 4 லிட்டர் / மணிக்கு இருக்க வேண்டும். மென்பக்க குழாய்களை உபயோகிப்பதன்மூலம் முதன்மை செலவை குறைக்கலாம். தகுந்த நீர் வடிகட்டிகள் மற்றும் உரச்செலுத்திகளை பயன்படுத்துவதன் மூலம் நீர்தொட்டிகளில் அடைப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்
No comments
Post a Comment