அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட சசிகலா, சில நாட்களுக்கு முன்பே போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டு விட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன. டிசம்பர் 14ம் தேதி முதல் அவர் போயஸ் தோட்டத்தில் தங்கவில்லை என்று அத்தகவல் தெரிவிக்கிறது.
அதற்கு முன்பே மூத்த அமைச்சர்களை அழைத்து சசிகலா உள்ளிட்டோருடன் இனி நேரடித் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று ஜெயலலிதா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. எனவே அப்போதே அவர் சசிகலாவை நீக்கும் முடிவுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அனைத்து அமைச்சர்களிடமும் அவர் முக்கிய உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார். அதன்படி, இனிமேல் நீங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். எந்த உத்தரவாக இருந்தாலும் துறைச் செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கலாம். சந்தேகம் இருந்தால் என்னை அணுகலாம் என்றும் கூறப்படுகிறது.
இதை அறிந்து கொண்ட சசிகலா, டிசம்பர் 14ம் தேதி பெங்களூர் கோர்ட்டில் ஆஜரான பின்னர் போயஸ் தோட்டத்துக்குத் திரும்பாமல் ஜெயக்குமார் என்பவருக்குச் சொந்தமான கெஸ்ட் ஹவுஸுக்குப் போய் விட்டாராம். இந்த கெஸ்ட்ஹவுஸின் உரிமையாளரான ஜெயக்குமார் சிங்கப்பூரைச் சேர்ந்தவர். இவர்தான் மோனோ ரயில் காண்டிராக்டைப் பிடிக்க சசிகலா மூலம் கடுமையாக முயன்றவர் என்று கூறப்படுகிறது.
தற்போது சசிகலா அதே கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருக்கிறாரா என்பது தெரியவில்லை. அதேசமயம், அவர் பெசன்ட் நகர் கலாஷேத்திரா காலனியில் உள்ள தனது கணவர் நடராஜன் வீட்டுக்குப் போயிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சசிகலாவின் நீக்கம் அவரது ஆதரவு வட்டாரத்தை பெரும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
No comments
Post a Comment