உயிர் துறந்த பி.கே.வினிதா, ரம்யாராஜன் ஆகிய இருவரும் பெண்கள் வார்டில் நர்சுகளாக பணியாற்றி வந்தனர். இந்த வார்டில் இருந்த 9 நோயாளிகளை காப்பாற்றும் முயற்சியில் இவர்கள் மின்னல் வேகத்தில் ஈடுபட்டனர். கை, கால் முறிவால் பாதிக்கப்பட்ட 8 பேரை வெளியே கொண்டு வந்து காப்பாற்றி விட்டனர். 9வது நபரை காப்பாற்ற முடியவில்லை.
அதற்குள் நர்சுகள் இருவரும் புகைமூட்டத்தில் சிக்கி இறந்து விட்டதாக நர்சிங் பிரிவு மேற்பார்வையாளர் சும்னி தெரிவித்துள்ளார்.
இவர்களில் ரம்யா கோட்டையம் மாவட்டத்தில் ஊழவூரைச் சேர்ந்தவர். மருத்துவமனையில் தீ பிடித்தவுடன் தனது தாயார் உஷாவுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். பேசிக்கொண்டிருக்கும்போதே இணைப்பை துண்டித்துவிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார். ரம்யாவின் தந்தை ராஜப்பன் தினக்கூலியாக வேலை பார்த்து 5 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். தாயார் உஷா மகளை ஆந்திராவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் வங்கிக் கடன் மூலம் படிக்க வைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னால் படிப்பை முடித்துவிட்டு வங்கிக் கடனை அடைப்பதற்காக அவசர அவசரமாக ஏ.எம்.ஆர்.ஐ. தனியார் மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்துவிட்டார்.
இதுபோல் நர்ஸ் வினிதாவும் ஆந்திராவில் படித்தவர். கேரள மாநிலம் கோதநல்லூரைச் சேர்ந்த இவரது தாயாரும், தந்தையும் தினக்கூலிகள் ஆவர். இவரது தங்கையும் நர்சுக்கு படித்துக்கொண்டிருக்கிறார். வினிதாவின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு பேரிடியாக இருந்தது.
No comments
Post a Comment