Latest News

November 05, 2011

சாந்தி மந்திரத்தை ஏன் மூன்று முறை சொல்கிறோம்?
by admin - 0

சாந்தி என்றால், அமைதி. நம் மனத்திலும் ஓர் அமைதி எப்போதும் குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போது நாம் அதை உணர்வோம்? நம் மனத்தில் எழும் கிளர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தேயத் தொடங்கி, முழுவதுமாக அடங்கிய பிறகு அங்கே அமைதி உணரப்படுகிறது. காரணம், அமைதி ஏற்கெனவே அங்கே இருப்பதுதானே! நாம்தான் அதை மெதுவாக உணர்கிறோம்.
இந்த அமைதியை உணர்வதற்காகத்தான், இறைவனைப் பற்றிய சிந்தனையை மனத்தில் கொண்டு, பிரார்த்தனை செய்வது, பாடல்கள் பாடுவது, தோத்திரங்கள் சொல்வது என்று நம் மனத்தை இவற்றில் ஈடுபடுத்துகிறோம். இத்தகைய சிந்தனைகளால் மனம் பின்னர் துன்பத்தை உணராது. அமைதியை உணரும். அதை உணரச் செய்வதற்காகத்தான், இறைவழிபாட்டு சுலோகங்கள், பிரார்த்தனைகள் சொன்ன பிறகு ஓம் சாந்தி: ஓம் சாந்தி: ஓம் சாந்தி: என்று மூன்று முறை சொல்கிறோம்.
நம் இந்திய மரபில் எந்த ஒரு விரைவுச் சொல்லையும், மங்களகரமான சொற்களையும் உச்சரிக்க, மூன்று முறை அதைச் சொல்வது மரபு.
நமக்கு தடைகள், பிரச்னைகள் ஆகியவை மூன்று விதமான காரணிகளால் ஏற்படுகின்றன.
ஆதிதைவிகம்: இயற்கையாக ஏற்படும் அழிவுகள், துன்பங்கள். பூகம்பம், வெள்ளம், எரிமலைகள் போன்றவற்றால் ஏற்படுவது.
ஆதிபெüதிகம்: மனிதரால், விலங்குகளால் ஏற்படும் அழிவுகள், துன்பங்கள், விபத்து, மனிதரால் செய்யப்படும் கொலைகள், துன்பங்கள், குற்றங்கள், மக்கள் தொகைப் பெருக்கம் போன்றவை...
ஆத்யாத்மிகம்: நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் மன சஞ்சலங்கள்.
இந்த மூன்றிலிருந்தும் நம்மை நாம் காத்துக்கொள்ள, மனமார்ந்த கடவுள் பிரார்த்தனையே கைகொடுக்கும். தினசரி வாழ்வில் நமக்கு ஏற்படும் சிக்கல்களில் இருந்து விடுவிக்கவும் செய்யும்.
நாம் முதல் முறையாக ஓம் சாந்தி: என்று சத்தமாக ஒலிக்கும்போது, அது நம் கண்களுக்குத் தெரியாத ஆதிதைவிகம் என்ற வகை துன்பத்திலிருந்து நம்மை விடுவிக்கும். இரண்டாவது முறையாக கொஞ்சம் சத்தம் குறைத்து ஒலிக்கும்போது, மற்றவர்களால் ஏற்படும் துன்பங்களில் இருந்து நாம் அமைதியைப் பெறுவோம். மூன்றாம் முறையாக மெதுவாக உச்சரிக்கும்போது, நம் மனத்தில் எழும் சஞ்சலங்களால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுதலை பெற்று அமைதியை உணர்ந்தவர்கள் ஆவோம். அதனால்தான் சாந்தி மந்திரங்கள் மூன்று முறை உச்சரிக்கப்படுகின்றன.
« PREV
NEXT »

No comments