Latest News

November 30, 2011

உலக காலநிலை மாற்றம் இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் - ஆய்வில் அச்சம்
by admin - 0

உலகில் கால நிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் உயரும் போது இலங்கையிலும் அதன் தாக்கம் ஏற்படலாம் என ஆய்வொன்றில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 

ஐ.நா.வின் மனித குடியிருப்பிற்கான திட்டத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளதாக மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கட்டிட வடிவமைப்பு பீடத்தின் தலைவரான பேராசிரியர பி.கே.எஸ் மகாநாம கூறுகின்றார். 

வறண்ட வலயப்பகுதியான மட்டக்களப்பு, ஈர வலயமான நீர்கொழும்பு ஆகிய கரையோர நகரங்கள் தெரிவு செய்யப்பட்டு தாங்கள் ஆய்வுகள் மேற்கொண்டதாக தெரிவிக்கும் அவர், அடுத்த முப்பது நாற்பது ஆண்டுகளில் விஞ்ஞானிகளினால் எதிர்வு கூறப்பட்டது போல் கடல் மட்டம் வெகுவாக உயருமானால் மட்டக்களப்பு நகர கரையோரத்தில் 20 சதவீதமும் நீர்கொழும்பு நகர கரையோரத்தில் 15 சத வீதமும் தாழ்ந்து போகும் அபாயம் உள்ளது என்றும் கூறுகின்றார். 

இருப்பினும் 100 சத வீதம் இப்படி நடக்கும் என்று கூற முடியாது என்றும் கால நிலை மாற்றங்களின் தாக்கம் ஏற்படலாம் அல்லது ஏற்படாமலும் போகலாம் என்றும் அவர் தெரிவிக்கிறார். 

ஏனைய கரையோர நகரங்களிலும் இப்படியான தாக்கங்கள் இருக்கலாம். ஆனால் அங்கு எவ்வித ஆய்வுகளும் மேற்கொள்ளவில்லை என்று கூறும் பேராசிரியர் பி.கே.எஸ் மகாநாம, இதனை தடுப்பதற்குரிய செயல்பாட்டு திட்டமொன்று தங்களால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் நிதிப்பிரச்சினை அதற்கு தடையாக இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார். 

இந்த விடயத்திற்காக நோர்வே உதவ முன் வந்துள்ளதாக தெரிவித்த அவர், அந்நாட்டின் நிதி கிடைக்குமானால் முற்றாக இல்லா விட்டாலும் இந்த நகரங்களில் ஓரளவாவது செயல் திட்டத்தை தங்களால் மேற்கொள்ளமுடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். 
« PREV
NEXT »

No comments