Latest News

November 07, 2011

நுளம்பை கொண்டே நுளம்பை அழித்தல்-நன்றாக பொருந்துது
by admin - 0

டெங்கு மற்றும் ஏனைய கொசுக்கடி நோய்களை எதிர்கொள்வதற்கு மரபணுமாற்றம் செய்யப்பட்ட நுளம்புகளைப் பயன்படுத்த முடியும் என்று பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆண் நுளம்புகளை மரபணுமாற்றம் செய்வதன் மூலம், நுளம்பு பெருக்கத்தை தடுக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவு.

கேய்மன் தீவுகளில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட பகுதியொன்றில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட ஆண் நுளம்புகள் காட்டிலுள்ள மற்றைய பெண் நுளம்புகளுடன் வெற்றிகரமாக இணை சேர்ந்தமையை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.காட்டில் இவ்வாறான மரபணுமாற்ற நுளம்புகள் சோடி சேர்கின்றமை இதற்கு முன்னர்வரை கண்டறியப்பட்டிருக்க வில்லை. இந்தப் புதிய கண்டறிதலின் மூலம் நோய்க்காவி நுளம்புகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக நேச்சர் பயோடெக்னோலோஜி என்கின்ற சஞ்சிகையில் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏடிஸ் ஈஜிப்டி என்ற நுளம்பு கடிப்பதன் மூலம் தொற்றும் வைரஸினால் டெங்கு நோய் ஏற்படுகின்றது.
ஆண்டு தோறும் சுமார் 5 கோடிப் பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டுகின்றது.
ஆனால் டெங்கு நோய்க்கான தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இனப்பெருக்கம் செய்ய முடியாத ஆண் இனங்களை காடுகளுக்குள் விடுவதன் மூலம் நோய்க்காவி கொசுக்களையும் விவசாயத்தைப் பாதிக்கும் கிருமிகளையும் கட்டுப்படுத்த முடியும் என்று 1940களில் உணரப்பட்டது.
மலட்டுத் தன்மையான ஆண் கொசுக்களுடன் பெண் கொசுக்களை சேருவதன் மூலம் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படுவதால் நோயைப் பரப்பும் நுளம்புகளின் எண்ணிக்கை குறையும் என்று நம்பப்பட்டது.
கரீபியன் தீவான க்யூரோவ்ஸாவில் கால்நடைகளின் புண்களில் தங்கிநின்று பெருகும் ஒருவகை பூச்சி இனம் இவ்வாறு கதிர்வீச்சு மூலம் மலடாக்கப்பட்ட ஆண் இனங்களை உருவாக்கியதன் மூலம் 1950 களில் முற்றாக ஒழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் நோய்க்காவி கொசு இனங்களை அழிப்பதில் இந்த தொழிநுட்பம் வெற்றியடையவில்லை.
உலக சுகாதார ஸ்தாபனம் நம்பிக்கை
ஒரு பெண் நுளம்பு ஒரு தரம் ஒரு ஆண் நுளம்புடனே இணைவதால் இந்த முறை பெருக்கத்தை குறைக்க நல்ல வழியாகும்
உலக சுகாதார ஸ்தாபனம்
ஆனால், தற்போதைய புதிய கண்டுபிடிப்பில், மரபணுமாற்றம் செய்யப்பட்ட நுளம்புகளை பரப்புவதன்மூலம் முட்டைகள் கூட்டுப்புழுவாகி முதிர்ச்சியடைந்து நுளம்புகளாக முன்னரே அவற்றை அழிந்து போகச் செய்ய முடியும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஏடிஸ் நுளம்புகள் அதிகளவில் காணப்படும், அடிக்கடி டெங்கு தொற்றுக்கு பெருமளவில் உள்ளாகும் கேய்மன் தீவுகளுக்குள் மரபணுமாற்றம் செய்யப்பட்ட ஒருதொகை நுளம்புகளை விஞ்ஞானிகள் 2009ம் ஆண்டில் வெளியிட்டிருந்தனர்.
பின்னர் சில வாரங்களில் அந்தப் பகுதிகளிலிருந்து பெறப்பட்ட நுளம்பு முட்டைகளை பரிசோதனை செய்து பார்த்த போது, அவற்றில் சிலவற்றில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட நுளம்புகளின் மரபணுக்கள் இருப்பதைக் கண்டறிந்த விஞ்ஞானிகள், தமது முயற்சி சாத்தியம் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர்.
நுளம்பு இனத்தை இந்த வழிமூலம் ஒடுக்கிவிடலாம் என்பதை முதலில் இந்த ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தில் டெங்கு நோய் நிபுணராக உள்ள டொக்டர் ராமன் வேலாயுதன் பிபிசியிடம் சுட்டிக்காட்டினார்.
இலங்கை, இந்தியா போன்று டெங்கு நோய் பெரும் சவாலாக இருக்கின்ற உலகின் பல நாடுகளுக்கு இந்த முயற்சி வெற்றி பெறுவது பெரும் நன்மையளிக்கும்.
Get cash from your website. Sign up as affiliate.
« PREV
NEXT »

No comments