Latest News

November 29, 2011

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்ய எதிர்க்கவில்லை - தமிழக அரசு
by admin - 0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கு தமிழக அரசு ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தமிழக அரசு சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும், தங்களை விடுவிக்க வேண்டும் என்று மூன்று பேரும்கோரிக்கை விடுத்து மனு செய்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மூவரையும் தூக்கில் போடுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

கடந்த ஓகஸ்ட் 30ம் திகதி இந்த வழக்கை விசாரித்தபோது 8 வார கால இடைக்காலத் தடையை உயர்நீதிமன்றம் விதித்தது. இதனால் மூன்று பேரும் தூக்குக் கயிற்றிலிருந்து தற்காலிகமாக தப்பியுள்ளனர். 

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரியும் வெங்கட் என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இதை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசு, மாநில அரசு உள்ளிட்டோருக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் நடைபெறும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படவில்லை. 

இந்தப் பின்னணியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று தமிழர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சி.நாகப்பன், பி.சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய குழு முன்பு இன்று (29) விசாரணைக்கு வந்தது. 

அப்போது மத்திய அரசு சட்டத்தரணி ரவிந்திரன் ஆஜராகி வாதிடுகையில், 

பஞ்சாப்பைச் சேர்ந்த புல்லர் என்பவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது. இதில் மரண தண்டனையை விதிக்கப்பட்டோர், மாநில கவர்னர், குடியரசு தலைவரிடம் தாக்கல் செய்த கருணை மனு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. 

டிசம்பர் 2-வது வாரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதனால் இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

இதேவேளை, உள்துறை செயலாளர் ரமேஷ் சர்மாமிஸ்ரா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில், 

இந்த வழக்கில் அரசு தாக்கல் செய்த பதில் மனுவை ஊடகங்கள் புரிந்து கொண்டுள்ளன. அதனால் இந்த கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளோம். இந்த நீதிமன்றத்தின் வாயிலாக தண்டனையை குறைக்க கேட்டு இந்த மூவரும் மனுதாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் தங்களது கருணை மனு மீது ஜனாதிபதி முடிவு எடுப்பதற்கு 11 ஆண்டுகள் காலதாமதமானதை சுட்டிக் காட்டியுள்ளனர். அதுபற்றி மாநில அரசு கருத்து கூற விரும்பவில்லை. 

கருணை மனு நிராகரித்தது தொடர்பாக குடியரசு தலைவர் பிறப்பித்த உத்தரவு கிடைத்த பின்னர் தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைதான் எடுத்தது. அதே நேரத்தில் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து 30-8-2011 அன்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க குடியரசு தலைவர் பரிசீலிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

இந்த தீர்மானம் குறித்து விவரம் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை இந்த நீதிமன்றின் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 

பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி வெங்கட் என்பவர் உச்ச நீதிமன்றில் தொடர்ந்த வழக்கில் ஜனவரி 11-ந் திகதிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. 

எனவே வழக்கை ஜனவரி 11-ந் திகதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றார். 

அப்போது தமிழக அரசின் சட்டத்தரணி ஜெனரல் நவநீதகிருஷ்ணன் வாதிடுகையில், 

இந்த வழக்கில் மாநில அரசு பதில் மனுதாக்கல் செய்து இருந்தது அந்த மனுவை ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டு செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் உள்துறை செயலாளர் கூடுதலாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

இந்த 3 பேரது மரண தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசு எதிர்க்கவில்லை. தண்டனையை குறைக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். இப்போதாவது வைகோ திருப்தி அடைவாரா? என்றார். 

இதைக் கேட்டதும் வைகோ சிரித்தார். பின்னர் சரி என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், நாங்களும் புரிந்து கொண்டோம். வழக்கை ஜனவரி 31ம் திகதிக்கு ஒத்திவைக்கிறோம் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர். 
« PREV
NEXT »

No comments