Latest News

November 02, 2011

தி. நகரில் சீல்வைத்த கடைகளை இடிக்க முடிவு?- திகைப்பில் பணியாளர்கள்
by admin - 0

சென்னை தியாகராய நகரில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் கட்டட உரிமையாளர்களும் வியாபாரிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மூடப்பட்ட கட்டடங்களுக்குள் பொருட்கள் முடங்கியுள்ளதால் வியாபாரிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

மேலும், தங்களது வேலை என்னவாகும், அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் அந்தக் கடைகளில் வேலை பார்த்து வரும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பெரும் திகைப்பிலும், அதிர்ச்சியிலும் உள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணியில் சி.எம்.டி.ஏ. அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் திங்கட்கிழமை முதல் ஈடுபட்டு வருகிறார்கள். தியாகராயநகரில் பல ஆண்டுகளாக விதிகளை மீறி பல கட்டிடங்கள் கட்டப்பட்டாலும் கடந்த 2007-ம் ஆண்டுதான் இவற்றை கண்டிப்புடன் தடுக்க அதிகாரிகள் முயற்சி எடுத்தனர். 

சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, தியாகராயநகர் பகுதி வாழ் மக்கள் என பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காரணத்தால் உயர்மட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தியாகராய நகரில் விதிமீறல் கட்டிடங்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தனர். இதில் 64 கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

விதிமுறை மீறல்

ஆனால் சில கடைக்காரர்கள் சிட்டி சிவில் கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கி விட்டனர். இதனால் அந்த கடைகளின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது தடைகள் விலக்கப்பட்டு திங்கட்கிழமையன்று 32 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 32 கட்டடங்களுக்கு அடுத்த கட்டமாக சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக கோர்ட் தடையை நீக்க அதிகாரிகள் முயற்சி எடுத்துள்ளனர்.

ஒவ்வொரு கடைக்கும் பக்கத்தில் 5 அடி இடம் விட வேண்டும், முன்புறம் 10 அடி இடம் விட வேண்டும் என்ற குறைந்தபட்ச விதிகளை கூட பின்பற்றாமல் இவர்கள் கடை கட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கட்டட உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் பெற்றுள்ள தடையாணையை விலக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். 

வியாபாரிகள்-ஊழியர்கள் தவிப்பு

சீல் வைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு செவ்வாய்கிழமையன்று மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த கடைகளில் உள்ள பொருட்கள் அப்படியே முடங்கி கிடக்கின்றன. இதில் வேலை பார்த்த ஊழியர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் வேலையின்றி பரிதவிக்கின்றனர். சீல் வைக்கப்பட்ட கடைகளுக்குள் பொருட்கள் முடங்கி கிடக்கின்றன. நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் செயல்படுவதால் சீல் வைக்கப்பட்ட கடைகளின் நிலை இனி என்ன ஆகும் என்று தெரியாமல் வியாபாரிகள் கவலையுடன் உள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமங்களில் இருந்தும் தி.நகருக்கு வந்து பொருட்களை வாங்கிச்செல்லும் சிறு வியாபரிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். தற்போது 100 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு அனுப்ப வேண்டிய பொருட்களையும் எடுக்க முடியவில்லை.

கடைகளை இடிக்க முடிவு?

மாநகராட்சி அதிகாரிகள் தினமும் அந்த பகுதி கடைகளை கண்காணித்து வருவதால் தியாகராயநகரில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களில் உள்ள கடையை திறக்கக்கூடாது என்று அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் கடையை இடிப்பதற்கு நோட்டீசில் எதுவும் குறிப்பிடவில்லை.

இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, கோர்ட் உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றனர். கடைகளை இடிக்க சொன்னால் தான் இடிப்போம். அதுவும் கடைக்காரர்தான் அவற்றை இடிக்கவேண்டும். நாங்கள் இடித்தால் அதற்கு உண்டாகும் செலவை கட்டிட உரிமையாளர்கள்தான் கொடுக்கவேண்டும். இது வியாபாரிகளுக்குதான் இரட்டிப்பு செலவாகும் என்றனர்.

உயர்மட்ட கண்காணிப்புக்குழு

இதனிடையே உயர்மட்ட கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றுள்ள சி.எம்.டி.ஏ. துணைத்தலைவர், மாநகராட்சி கமிஷனர், மின்வாரிய தலைமை அதிகாரி, குடிநீர் வாரியம், தீயணைப்பு நிலைய அதிகாரி, கலெக்டர் மற்றும் அரசு அதிகாரி அல்லாத 6 உறுப்பினர்களின் கூட்டம் புதன்கிழமையன்று கூடி முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் அடுத்த கட்டமாக எத்தனை கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பட்டியல் தயாராகும்.
« PREV
NEXT »

No comments