Latest News

November 25, 2011

இலங்கை வேளான் துறையில் 3வது போகமும் சாத்தியம்
by admin - 0

இலங்கை வேளான் துறையில், மூன்றாவது போகமாகவும் பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் வேளான் துறையில் உற்பத்தி திறனை அதிகரிக்கும் பொருட்டு, சிறு போகம் மற்றும் பெரும்போகம் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில், அதாவது மூன்றாவது போகமாகவும் விவசாயம் செய்யும் முறையினை
அரசு அறிமுகம் செய்துள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் ஈ.கருணாதிலக (K.E.Karunatileka) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் விவசாயம், சிறு போகம் மற்றும் பெரும் போகம் என இரு போகங்களாகவே பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனினும் இந்த இரண்டு போகங்களிற்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் இரண்டரை மாத கால இடைவெளி விடப்படுகின்றது.

இந்த இடைப்பட்ட காலத்தில் பயறு, கௌப்பி, குரக்கன், சோளம், உழுந்து போன்ற சில அத்தியவசிய உணவு பயிர்களை உற்பத்தி செய்ய முடியும். இதற்காக அம்பாந்தோட்டை, அனுராதபுரம், பொலனறுவை, இரத்தினபுரி மற்றும் மகாவலி பிரதேசங்களில் மூன்றாம் போக பயிர் செய்கை பரீட்சித்து பார்க்கப்பட்டது.

மேற்படி பிரதேசங்களில் உள்ள சுமார் 7,599 ஹெக்ரயர் நிலப்பரப்பில் மூன்றாவது போகமாக 6,137 மெற்றிக் தொன் பச்சைப் பயறு உற்பத்தி செய்யப்பட்டது. இதன் காசுப் பெறுமதி 613.7 மில்லியன் ரூபாவாகும். இவ்வாறு மூன்றாம் போக செய்கை வெற்றி அளித்துள்ள நிலையில், இதனை இலங்கையின் ஏனைய பிரதேசங்களிற்கும் விஸ்தரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பருப்பு வகைகளை உற்பத்தி செய்வதற்காக அரசு 6.2 மில்லியன் ரூபா பெறுமதியான விதை மற்றும் பசளைகளை விவசாயிகளிற்கு இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் ஈ.கருணாதிலக கூறியதாக அபிவிருத்திக்கான ஊடக மத்தியம் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
« PREV
NEXT »

No comments