Latest News

October 02, 2011

இயற்கை முறையில் பூச்சி கட்டுப்பாடு
by admin - 2

இனக்கவர்ச்சி பொறி என்பது எதிரெதிர் பாலினத்தைச் சேர்ந்த தாய்ப்பூச்சிகளைக் கவர்வதாகும். ஒவ்வோர் பூச்சியும் எதிர் பாலினத்தைக் கவர்ந்து உறவுகொள்ள ஒரு விதமான வாசனையுள்ள ஹார்மோனை வெளியிடும். இந்த வாசனையை நுகர்ந்து ஆண் அல்லது பெண் பூச்சிகள் தங்கள் எதிர் பாலினத்தை நோக்கி வரும். இந்த இயற்கை அடிப்படையைக் கொண்டுதான் இனக்கவர்ச்சி பொறிகள் செயல்படுகின்றன. 
இவ்வாறு கவரப்படும் பூச்சிகள் பின்னர் அழிக்கப்படும். இதன்மூலம் முட்டையிடுதல் தவிர்க்கப்படுகிறது. முட்டையிடுதல் தவிர்க்கப்படுவதால் புழுக்கள் உற்பத்தி ஆவது தவிர்க்கப்பட்டு பூச்சி மருந்தின் தேவையும் குறைகிறது. இனக்கவர்ச்சிப் பொறிகள் மூலம் எல்லாவிதமான பூச்சிகளையும் கட்டுப்படுத்த இயலாது. குறிப்பிட்ட பயிர்களில் குறிப்பிட்ட பூச்சிகளை மட்டுமே கட்டுப்படுத்தவல்லது.
கத்தரி தண்டு துளைப்பான், வேர்க்கடலை இலை மற்றும் காய் துளைப்பான், தக்காளி காய் துளைப்பான், நெல் தண்டு துளைப்பான். பொறிகள் வைப்பதால் பூச்சி மருந்தின் தேவை குறைகிறது. ஒரு ஏக்கருக்கு 5-6 பொறிகள் வைத்தால் போதுமானது.
ஒட்டும் பொறி: சாறு உறிஞ்சும் பூச்சிகளான கொசு, வெள்ளை ஈ போன்றவற்றைக் கட்டுப்படுத்த இந்த ஒட்டும் பொறி பயன்படுகிறது. ஒரு தகரஷீட்டில் மஞ்சள் பெயின்ட் அடித்து அதன் மேல் மண்ணெண்ணெய் தடவி வயல்களில் வைத்தால் இந்தப்பூச்சிகள் தகர ஷீட்டில் ஒட்டிக்கொள்ளும். வெண்டை, பருத்திப்பயிரில் இது பெரிதும் பயன்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 4-5 பொறிகள் வைத்தால் போதுமானது. இருப்பினும் பூச்சி தாக்குதலுக்கேற்ப பொறிகளின் எண்ணிக்கை மாறலாம்.
இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கரைசல்: தற்போது இயற்கை விவசாயம் பெருமளவில் விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் பூச்சிக் கட்டுப்பாடு மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. இதில் ஒரு எளிமையான முறை ஒன்றை தற்போது காண்போம். இஞ்சி,பூண்டு, பச்சைமிளகாய் கரைசல் என்பது இதன் பெயர்.
பூண்டு ஒரு கிலோ எடுத்து கெரசினில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் இதனை எடுத்து நல்ல விழுதாக வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும். அரை கிலோ பச்சை மிளகாய் மற்றும் அரை கிலோ இஞ்சி எடுத்து தனித்தனியாக விழுது பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் இவ்வாறு தனித்தனியாக அரைத்த விழுதுகளை நன்றாக கலந்து ஒரு காடா துணியில் வைத்துக்கொள்ள வேண்டும். . இவ்வாறு தயார் செய்த காடா துணியில் வைக்கப்பட்ட கலவையை 6 லிட்டர் தண்ணீரில் முக்கி ரசத்தை வடிக்கவும். இப்போது நமக்கு 6 லிட்டர் கரைசல் தயார்.
இந்த கரைசலை பூச்சி தாக்குதல் குறைவாக இருந்தால் 500 மில்லியும் தாக்குதல் அதிகமாக இருந்தால் 1 லிட்டரும் எடுத்து முறையே 9.5 மற்றும் 9 லிட்டர் தண்ணீரில் கலந்து பூச்சிகள்/செடிகள் மீது தெளித்தால் புழு வகை பூச்சிகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.
காதி சோப்பை தண்ணீரில் கரைத்து அடித்தால் அது நாம் அடிக்கும் இயற்கை பூச்சிமருந்து கரைசலை செடியின் மீது ஈர்த்து வைத்துக்கொள்ள உதவும். இதன்மூலம் இக்கரைசலின் வீரியமும் அதிக நேரம் செடியில் இருக்கும். இதை தயார் செய்யும்போது கைக்கு கையுறை தேவை. இல்லையெனில் கை எரிச்சல் அதிகமாக இருக்கும். கவனம் தேவை.
« PREV
NEXT »