Latest News

October 12, 2011

20 நாடுகளில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை- மக்கள் வெளியேற்றம்
by admin - 0

ஐ.நா. ஏற்பாட்டின் பேரில், இந்தியப் பெருங்கடல் நாடுகளில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்தியா உள்ளிட்ட 18 நாடுகள் பங்கேற்றன.

2004ம் ஆண்டு இந்தோனேசியாவின் கடல் பகுதியில் 9.2 ரிக்டர் அளவிலான மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து வரலாறு காணாத சுனாமி தாக்குதலை இந்தியப் பெருங்கடல் நாடுகள் சந்தித்தன. இரண்டரை லட்சம் பேர் இதில் சிக்கி உயிரிழந்தனர். பல லட்சம் பேர் வீடுகள், சொத்துக்களை இழந்தனர். இந்தத் தாக்குததலுக்குப் பிறகு சமீபத்தில் ஜப்பானிலும் சுனாமி தாக்கி பல ஆயிரம் பேர்களின் உயிரைப் பறித்தது.

இந்த நிலையில், அதே 9.2 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கினால் அதிலிருந்து எப்படி மக்களைக் காப்பது என்பதற்காக ஒரு சுனாமி ஒத்திகை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று நடந்த இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட இந்தியப் பெருங்கடலையொட்டியுள்ள 18 நாடுகள் பங்கேற்றன. இதற்காக செயற்கை சுனாமி அலைகள் உருவாக்கப்பட்டன. மேலும் பல எச்சரிக்கைச் செய்திகளும் பரப்பப்பட்டன.

அதன்படி இந்தோனேசியாவின் பந்தா அசே பகுதியில் நடந்த ஒத்திகையின்போது சுனாமி அலைகளிலிருந்து தப்புவதற்காக மக்களை அவசரம் அவசரமாக வெளியேற்றினர். மக்களும் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.

இந்த ஒத்திகையின் மூலம் இந்திய பெருங்கடல் நாடுகளும், ஆஸ்திரேலியாவும் தங்களது ஆயத்த நிலையைப் பரீட்சித்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. மேலும், சுனாமி முன்னெச்சரிக்கை சாதனத்தின் செயல்பாடுகளும் பரிசோதிக்கப்பட்டன.

இன்றைய ஒத்திகையில் இந்தியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், கென்யா, மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொசாம்பிக், பர்மா, ஓமன், பாகிஸ்தான், செஷல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தான்சானியா, கிழக்கு தைமூர் ஆகிய நாடுகள் பங்கேற்றன.

ஒத்திகையின் ஒரு பகுதியாக சோதனை முறையிலான நில நடுக்க அபாய எச்சரிக்கைத் தகவல்களும், சுனாமி எச்சரிக்கை செய்தியும் பரப்பப்பட்டன. அதற்கேற்ப ஒவ்வொரு நாட்டிலும் மக்களை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்தோனேசியாவில் தொடங்கி தென் ஆப்பிரிக்கா வரை கிட்டத்தட்ட 12 மணி நேரம் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

இந்த ஒத்திகை குறித்து இந்தோனேசியாவின் அசே மாகாணத்தைச் சேர்ந்த பக்தியார் என்பவர் கூறுகையில், சுனாமி அபாய எச்சரிக்கை மணி ஒலித்தவுடன் நான் எனது குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடினேன் என்றார்.

இருப்பினும் கடந்த சுனாமி தாக்குதலில் பல உறவுகளைப் பறி கொடுத்தவர்கள் இந்த சோதனை சுனாமி ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்து விட்டனர். கடந்த சம்பவத்தின் கசப்பான நினைவுகள் தங்களைத் தாக்குவதாக உள்ளதாக கூறி அவர்கள் இதில் பங்கேற்கவில்லை.

ஒத்திகை நிகழ்ச்சியில் போலீஸார், தீயணைப்புப் படையினர், மீட்புப் படையினர், நீச்சல் வீரர்கள், ராணுவத்தினர், மீட்பு விமானங்கள், ஹெலிகாப்டர்கள், அதிரடிப்படையினர் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு நாடுகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.
« PREV
NEXT »

No comments