Latest News

September 28, 2011

எதிர்ப்பை மீறி வெளியாகும் 'சத்யானந்தா'
by admin - 0

போலிச்சாமியார்கள் பற்றிய திரைப்படம் ஒன்று சத்யானந்தா என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகிறது.

இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என நித்யானந்தா வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அந்த எதிர்ப்பையும் மீறி இந்தப் படத்தை திரையிடுகிறார்கள்.

படத்தின் டப்பிங், ரீ ரிக்கார்டிங் போன்ற பணிகள் முடிந்துள்ளது. தற்போது தணிக்கை குழுவுக்கு இப்படம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் சத்யானந்தா படத்தை ரிலீஸ் செய்வதற்கு நித்யானந்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். படத்துக்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் ஒரு வழக்கும், அத்துடன் ரூ. 3 கோடி கேட்டு தனியாக மானநஷ்ட வழக்கும் தொடர்ந்துள்ளார். இதற்கு படக்குழு சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் மதன்படேல் கூறுகையில், "சத்யானந்தா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. தணிக்கை குழுவுக்கும் அனுப்பி விட்டோம். தமிழகத்தில் ரிலீஸ் செய்ய தயாராகி வருகிறோம். நித்யானந்தா இந்த படத்தை தடை செய்ய முயற்சிப்பது வியப்பாக உள்ளது. படத்தை பார்க்காமலே அவர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று புரியவில்லை. உலகம் முழுவதும் போலி சாமியார்கள் உள்ளனர். அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவதே இப்படத்தின் நோக்கம்.

இந்த படம் ஒரு கற்பனை கதை. ஆன்மீகவாதிகள் போர்வையில் உள்ள போலிகளிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற சமூக அக்கறை யோடு இப்படத்தை எடுத்துள்ளோம். நித்யானந்தா ரூ.3 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளார். பணத்தை கொடுத்தால் ரிலீசுக்கு சம்மதிப்பாரா?," என்றார்.

இப்படத்தில் சத்யானந்தாவாக ரவி சேட்டன் நடித்துள்ளார். இத்தாலி நடிகை அனுகி, நேகா மிஸ்ரா ஆகியோரும் நடித்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments