Latest News

August 22, 2011

லிபிய புரட்சிப் படைகளிடம் திரிபோலி வீழ்ந்தது- கடாபியின் மகன் கைது
by admin - 0

திரிபோலி: லிபியப் புரட்சிப் படைகளிடம் தலைநகர் திரிபோலி வீழ்ந்தது. அதிபர் மும்மர் கடாபியின் ஆதரவுப் படையினர் தங்களது எதிர்ப்பை விட்டு விட்டு ஓடி விட்டனர். இதையடுத்து கடாபி வசம் 42 ஆண்டுகளாக இருந்து வந்த லிபியா தற்போது புரட்சிப் படையினரிடம் வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கடாபியி்ன் மகன் சைப் அல் இஸ்லாமையும் புரட்சிப் படையினர் பிடித்துள்ளனர்.

திரிபோலியின் மையப் பகுதியான கிரீன் ஸ்கொயர் முன்பு கூடிய புரட்சிப்படையினரும், அவர்களது ஆதரவாளர்களும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கடாபியின் வீழ்ச்சியைக் கொண்டாடினர்.

தற்போது கடாபி எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. இருப்பினும் அவரது பேச்சு மட்டும் டிவியில் ஒளிபரப்பானது. அதில் பேசிய கடாபி, கடைசி வரை போராடுவோம். புரட்சிப் படையினர் மீது தகுந்த சமயத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்றார்.

கடாபியின் மகன் சைப் பிடிபட்டுள்ள நிலையில் இன்னொரு மகன் சரணடைவது குறித்து புரட்சிப் படையினருடன் பேசி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. 'சுருட்டைத் தலையன்' கதை முடிந்தது என்று புரட்சிப் படையினர் ஆவேசத்துடன் கூறினர். கடாபியின் தலைமுடியலங்காரத்தை கேலி செய்து சுருட்டைத் தலையன் என்று அவர்கள் கூறினர்.

தற்போது திரிபோலியின் பெரும்பாலான பகுதிகள் புரட்சிப் படையினர் வசம் வந்து விட்டது. இதையடுத்து அங்கு சோதனைச் சாவடிகளை அவர்கள் அமைத்துள்ளனர். மேலும் துப்பாக்கி ஏந்திய பலர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

ஓரிரு பகுதிகள் மட்டும் இன்னும் கடாபி ஆதரவு ராணுவத்தினர் வசம் உள்ளது. இருப்பினும் அந்த இடத்தில் கடாபி மறைந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அவர் பாதுகாப்பான இடத்திற்கு தப்பி ஓடியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் கடாபிக்கு எதிராக லிபியாவில் புரட்சி வெடித்தது. அன்று முதல் தொடர்ந்து கடாபி படையினருக்கும், புரட்சிப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்தது. இந்தப் போர் தற்போது முடிவுக்கு வரும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. புரட்சிப் படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு கொடுத்து வந்தனர். நேட்டோ படைகளும் லிபியா மீது தாக்குதல் நடத்தின.

திரிபோலியைப் பிடிக்க மூன்று முனைகளில் புரட்சிப் படையினர் தாக்குதல் நடத்தி முன்னேறி வந்தனர். இன்றுதான் அத்தாக்குதலில் அவர்கள் வெற்றியைப் பெற்றனர்.

தெருக்கள் தோறும் புரட்சிப் படையினரு்ம் திரிபோலியில் வசித்து வரும் சொற்ப மக்களும் சேர்ந்து வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

நேட்டோ பொதுச் செயலாளர் ஆண்டிரஸ் போக் ரஸ்முஸன் கூறுகையில், கடாபியின் ஆட்சி ஆட்டம் கண்டு விட்டது. புதிய ஜனநாயக லிபியா உருவாகும் சூழல் வந்து விட்டது. விரைவில் கடாபியும் பிடிபடுவார் என்று நம்புகிறோம். நிச்சயம் அவர் பிடிக்கப்படுவார் என்றார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவும் புரட்சிப் படையினரின் வெற்றியை வரவேற்றுள்ளார். அவர் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில், மேலும் ரத்தக்களறி ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், அதிபர் கடாபி தனது பதவியை விட்டு உடனடியாக விலக வேண்டும். விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

அரபு நாடுகளிலேயே அதிக காலமாக ஆட்சியில் நீடித்து வந்த ஒரே தலைவர் கடாபி மட்டுமே. கடந்த 42 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சியை அவர் நடத்தி வந்தார். வடக்கு ஆப்பிரிக்காவின் மூலையில் உள்ள லிபியா எண்ணெய் வளம் மிக்க நாடாகும். ஆனால் அங்கு தொடர்ந்து மக்கள் நலம் முடக்கப்பட்டு வந்தது.

கடந்த 1988ம் ஆண்டு பான் ஆம் விமானம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து லிபியா சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டது. இந்த விமான தாக்குதலில் 270 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு லிபியாதான் காரணம், கடாபிதான் இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதை நீண்ட காலம் மறுத்து வந்த கடாபி பின்னர் ஒத்துக் கொண்டார். மேலும், குண்டுவெடிப்பில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா 10 மில்லியன் டாலர் உதவி தருவதாகவும் அவர் கூறினார்.

இதன் மூலம் சர்வதேச தனிமையிலிருந்து மெதுவாக விடுபடத் தொடங்கியது லிபியா. இருப்பினும் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி கடாபிக்கு எதிராக புரட்சி வெடித்தது. அரபு நாடுகளில் எழுந்த புரட்சிகளைத் தொடர்ந்து லிபியாவிலும் மக்கள் புரட்சி வெடித்துக் கிளம்பியது. இப்போது அது பெரும் ரத்தக்களரியுடன் முடிவுக்கு வருகிறது.
« PREV
NEXT »

No comments