Latest News

July 08, 2011

ஒலிம்பிக்கில் சாதனை படைத்து உலகிற்கு உதாரணமான துஷ்யந்தன்
by admin - 0

கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் நடந்த விசேட தேவையுடையவர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் யாழ்ப்பாணம் சிவபூமி பாடசாலையின் மாணவன் செல்வன் சிவராஜா துஷ்யந்தன் வெள்ளிப்பதக்கம் பெற்றுச் சாதனை படைத்த செய்தி தமிழ்கூறும் நல்லுலகைப் பெருமைப் படுத்தியுள்ளது.

மாற்றுவலுவுடைய மாணவன் துஷ்யந்தன் ஏதென்ஸ் நகரில் கால்பதித்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்றமை யாழ்ப்பாண மண்ணிற்கு மட்டுமன்றி இலங்கைத் தீவுக்கே பெருமை சேர்ப்பதாகும்.

மாணவன் துஷ்யந்தனின் இச்சாதனை சாதாரணமானதன்று.

பேசுகின்ற, கேட்கின்ற சக்தியை இழந்த துஷ்யந்தன் இச்சாதனையைப் படைப்பதற்கு பின்புலமாக பலர் இருந்துள்ளனர் என்பதை நினைக்கும் உயர்ந்த மானிடப் பண்பாட்டின் பெருமைக்கு நாங்களே சொந்தக்காரர்கள் என மார்தட்டிக் கூறவேண்டும் போல் உள்ளது.

ஒரு காலத்தில் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த இந்த மாணவர்களை வெளியில் கொண்டுவரும் மிகப்பெரும் தெய்வீகப் பணியை யாழ்ப்பாணத்து சிவபூமி அமைப்பினர் மேற்கொண்டிருந்தனர்.

சிவபூமி அமைப்பின் ஸ்தாபகர் செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் அவர்களும் அவரோடு இணைந்து தர்மப் பணி செய்வோரும் எடுத்த முயற்சியின் பயனாக மாணவன் துஷ்யந்தன் கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் விளையாடி வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

துஷ்யந்தனின் சாதனையில் சிவபூமி அமைப்பும், அவருக்கு பயிற்சி வழங்கிய சேவையாளர்கள் மற்றும் துஷ்யந்தன் சாதனை படைக்க யார்யாரெல்லாம் உதவி புரிந்தார்களோ அவர்கள் அத்தனைபேரும் இந்த வரலாற்று சாதனையின் பிரசவிப்புக்குச் சொந்தக்காரர்கள் என்பதில் மறுகருத்துக்கிடமில்லை.

அதேவேளை துஷ்யந்தன் படைத்த இந்த உலக சாதனை ஒரு செய்தியைக் கூறி நிற்கின்றது. ஆம்! அன்புக்குரியவர்களே! எந்தப் பிள்ளையையும் இவரால் எதுவும் முடியாது என்று நினைத்து விடாதீர்கள். எதுவும் முடியாது என்று நீங்கள் நினைக்கக்கூடியவர்களாலும் உலக சாதனை படைக்க முடியும் என்பதே அந்தச் செய்தியாகும்.

ஆகையால் மாற்றுவலுவுடையவர்களை வீட்டுக்குள் பூட்டி வைக்கும் அறியாமையை உடைத்தெறிய துஷ்யந்தனின் சாதனையை உலகம் உதாரணமாக்கிக் கொள்ளலாம்.
வலம்புரி

« PREV
NEXT »

No comments