மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் இந்தியாவை மட்டுமல்லாமல், உலக நாடுகளிலும் அதிர்வலைகளை பரப்பியுள்ளது.
இச்சம்பவம் குறித்து அதிபர் பராக் ஒபாமா கருத்து தெரிவிக்கையில், மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகள் மிகவும் மோசமானது. இந்த கொடூர சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த சம்பவம் பெரும் கோபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அமெரிக்காவின் மிக நெருங்கிய நண்பர் மற்றும் கூட்டாளி இந்தியா. இந்தியாவின் இந்த.துயரமான நேரத்தில் அமெரிக்க மக்கள் அவர்களுக்குத் துணையாக இருக்கிறார்கள்.
விசாரணைக்குத் தேவையான, குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தத் தேவையான உதவிகளை அமெரிக்க அரசு முழுமையாக இந்தியாவுக்குச் செய்யும் என்றார் ஒபாமா.
மும்பை குண்டுவெடிப்புக்கு பான் கி மூன் கண்டனம்:
மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மும்பையில் நடந்துள்ள குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு பொதுச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை எந்த காரணமும் நியாயப்படுத்தமுடியாது. இந்த தாக்குதல்களில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்பு பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் கூறுகையில்,
உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பவற்றில் தீவிரவாதமும் ஒன்று. எந்தவித தீவிரவாதச் செயலும் நியாயப்படுத்த முடியாத குற்றமாகும் என்றார்.
ஹிலாரியின் இந்திய பயணத்தில் மாற்றம் இல்லை:
இந் நிலையில் மும்பை தொடர் குண்டுவெடிப்பு காரணமாக அடுத்த வாரம் இந்தியா வரத் திட்டமிட்டுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனின் இந்தியப் பயணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியப் பயணம் முன்பே திட்டமிடப்பட்டது. குண்டுவெடிப்புகள் காரணமாக அதில் எந்தவித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்று அமெரிக்க தூதரக அதிகாரி பீட்டர் பர்லெய்க் தெரிவித்தார்.
தனது பயணத்தின்போது ஹிலாரி சென்னைக்கும் வரவிருக்கிறார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment