Latest News

July 30, 2011

மு.க., ஸ்டாலின் கைது - திருவாரூரில் பதட்டம்
by admin - 0


தி.மு.க., மாவட்ட செயலர் பூண்டி கலைவாணனை கைது செய்ய வந்த போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்த மாஜி துணை முதல்வர் மு.க., ஸ்டாலின், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் மற்றும் தி.மு.க,வினரை போலீசார் கைது செய்தனர். இதனால் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பதட்டம் நிலவுவதால் போலீசார் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். தீக்குளிக்க முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்டாலின் கைது ஏன் ? சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க, வினர் போராட்டம் நடத்தினர். இதில் திருவாரூர் கொடராச்சேரியில் மாணவர்கள் மறிக்கப்பட்டு பள்ளிக்கு செல்ல விடாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் மாணவர்கள் திரும்பி சென்று கொண்டிருந்த அரசு பஸ் லாரி மீது மோதி குளத்தில் விழுந்தது. இதில் சிக்கி மாணவன் விஜய் என்பவர் உயிரிழந்தார். இதற்கு மாவட்ட தி.மு.க.,வினரே காரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட செயலர் பூண்டி கலைவாணன் என்பவரை கைது செய்ய போலீசார் இன்று திட்டமிட்டிருந்தனர். மொழிப்போர் தியாகி பக்கீர்மைதீன் படத்திறப்பு விழாவிற்கு மு.க., ஸ்டாலின் திருவாரூர் வந்தார். இவர் திருத்துறைப்பூண்டி அருகே மணலியில் வந்து கொண்டிருந்தபோது மாவட்ட எஸ்.பி., தினகரன் தலைமையில் போலீசார் ஸ்டாலினுடன் வந்த வாகனத்தை மறித்தனர். கலைவாணனை கைது செய்கிறோம் என்றனர். இதற்கு ஸ்டாலின் காரணம் எதுவும் இல்லாமல் மாவட்ட செயலரை கைது செய்ய அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் போலீசாருக்கும், தி.மு.க.,வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் ஸ்டாலினையும் கைது செய்து திருவாரூர் அழைத்து சென்றனர். இந்த கைது காரணமாக திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ,மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

கல்யாண மண்டபத்தில் ஸ்டாலின்: மறியலில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்ட ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், இவரது ஆதரவாளர்களுடன் பைபாஸ் ரோட்டில் உள்ள கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.


மத்திய அமைச்சர் கைதா ? : மத்திய அமைச்சர் பழநி மாணிக்கமும் மறியலில் ஈடுபட்டார். முதலில் இவரும் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இவரை போலீசார் கைது செய்தனரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. ஆனால் திருவாரூர் கொண்டு செல்லப்படும் ஸ்டாலினுடன், பழனிமாணிக்கமு் செல்கிறார்.


சல, சலப்புக்கு அஞ்ச மாட்டோம்: ஸ்டாலின் பேட்டி : இந்த பிரச்னை குறித்து நிருபர்களிடம் பேசிய மு.க., ஸ்டாலின் கூறியதாவது: வரும் 1 ம் தேதி தமிழகம் முழுவதும் தி.மு.க., போராட்டம் நடத்தவிருக்கிறது. இந்த போராட்டத்தை முறியடிக்கும் விதமாக தமிழக அரசு இப்படி கைது அச்சுறுத்தலை காட்டி வருகிறது. தி.மு.க., பனங்காட்டு நரி, எந்த சல.சலப்புக்கும், அராஜகத்திற்கும் அஞ்சாது. இதற்கெல்லாம் மக்கள் மன்றத்திலும், கோர்ட்டிலும் பதில் சொல்லியாக வேண்டும்.

அத்துமீறி போகிறது : கருணாநிதி பேட்டி : டாலின் கைது கண்டித்து இன்று பேட்டியளித்த தி,மு.க., தலைவர் கருணாநிதி கூறுகையில்; கடந்த ஆட்சியிலும் போராட்டக்காரர்கள் எப்படி நடத்தப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும், காலையில் கைது செய்து மாலையில் விடுவோம். ஆனால் தற்போதைய ஜெயலலிதா ஆட்சியில் பழிவாங்கும் நடவடிக்கையாக நடக்கிறது. இதற்கு மேலும், மேலும் தூபம் போடும் காவல்துறையின் நடவடிக்கை அத்துமீறி போய்க்கொண்டிருக்கிறது. வரும் 1ம் தேதி போலீசாருக்கெதிரான போராட்டம் அறவழியில் திட்டமிட்டபடி நடக்கும் இவ்வாறு அவர் கூறினார்.


வீரபாண்டி ஆறுமுகமும் இன்று கைது : சேலம் மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில், இன்று 3 வது நாளாக கையெழுத்து போட வந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தைப் போலீசார் மீண்டும் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்ட வீரபாண்டியை கோவை மத்திய சிறையில் அடைக்க போலீசார் கொண்டு செல்கின்றனர். சுபம் மெட்ரிகுலேஷன் பள்ளிக்குச் சொந்தமான நிலத்தை வாங்கியது தொடர்பான வழக்கில் இவர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. போலீஸ் நிலையம் முன் கூடியிருந்த தி.மு.க.,வினர் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். போலீசாருடன் தி.மு.க.,வினர் மோதலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம், உடனடியாக நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சேலம், அங்கம்மாள் காலனி நிலம் மற்றும் பிரீமியர் மில் நில அபகரிப்பு வழக்கில், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம், ஐகோர்ட் உத்தரவுப்படி, மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில், 3 நாள் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பின், சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, "மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸில், தினமும் காலை 8 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவில், எத்தனை நாள் ஆஜராகி, கையெழுத்துப் போட வேண்டும் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.

அதன்படி, முதல் நாளான 28ம் தேதி காலை 8 மணிக்கு ஆஜராக வேண்டிய வீரபாண்டி ஆறுமுகம், 10 நிமிடம் காலதாமதமாக, காலை 8.10 மணிக்கு ஆஜரானார். இந்த காலதாமத்துக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் தரும்படி போலீசார் வலியுறுத்தினர். அதனால், வீரபாண்டி ஆறுமுகம் டென்ஷனானார். 2வது நாளான நேற்று, வீரபாண்டி ஆறுமுகம், 10 நிமிடத்துக்கு முன்னதாகவே, காலை 7.50 மணிக்கு, காரில் ஸ்டேஷனுக்கு வந்து இறங்கினார். 100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஸ்டேஷனுக்குள், 7.51 மணிக்கு நுழைந்த வீரபாண்டி ஆறுமுகம், 9 நிமிடம் நாற்காலியில் அமர்ந்தபடி காத்திருந்தார். சரியாக 8 மணி ஆனதும், வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு, 8.01 மணிக்கு வெளியே வந்தார். திரண்டிருந்த தி.மு.க.,வினர், வீரபாண்டி ஆறுமுகத்தை வாழ்த்தியும், அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். அப்போது, சிரித்த முகத்தோடு போலீசார், 8.05 மணிக்கு வீரபாண்டி ஆறுமுகத்தை வழியனுப்பி வைத்தனர்.

3வது நாளாக அவர் கையெழுத்திட வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். இந்நேரத்தில் போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கைது : சென்னை திரு‌வல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் திடீரென கைது‌ செய்யப்பட்டார். கைதான அன்பழகன் தென்சென்னை மாவட்ட தி.மு.க.செயலாளர் ஆவார். இவர் தியாகராயநகரில் உள்ள அவரது வீட்டில் இரு்ந்த போது போலீசார் வரை அதிகாலையில் கைது செய்தனர். நிலவிவகாரம் தொடர்பாக உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மில் அதிபர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதற்காக அவர் திருப்பூர் அழைத்து செல்லப்படுகிறார்.
2பஸ்கள் உடைப்பு : இவரது கைதுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க., தொண்டர்கள் சில இடங்களில் பஸ்கள் மீது கல்வீசி தாக்கினர். கலெக்டர் ஆபீஸ் மற்றும் அரசு ஆஸ்பத்திரி அருகே 2 பஸ்கள் ‌கண்ணாடி நொறுக்கப்பட்டன. இதனையடுத்து நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
« PREV
NEXT »

No comments